1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 5 மே 2015 (15:03 IST)

ஏழை குழந்தைகளின் படிப்புக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

ஏழை குழந்தைகள் படிப்பைத் தொடர்வதற்கு மத்திய அரசு உதவுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதரலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
 
முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:–
 
குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம் 2009 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 1.4.2010 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். இந்த சட்டத்தின் நோக்கமே 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அருகில் உள்ள பள்ளிகளில் கட்டாய கல்வி பெற வேண்டும் என்பதாகும்.
 
குழந்தைகள் கல்வி பெறும் உரிமை சட்டம் பற்றி 8.4.2010 அன்று மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. தமிழ்நாட்டில் 8.11.2011 அன்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
 
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12(1) (சி) படி ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழி வகை செய்யப்பட்டது. பிரிவு 12(2) ன்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கான செலவை ஈடுகட்டுவது பற்றி கூறப்பட்டுள்ளது.
 
பிரிவு 7 ல் கல்வி பெறும் உரிமை சட்டத்தை மத்திய–மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் பொறுப்பை கூறுகிறது.
 
கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி தமிழ்நாட்டில் 2013–14–ல் 49,864 குழந்தைகள், 2014–15–ல் 86,729 குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு தனியார் பள்ளிகள் செலவு செய்துள்ளன.
 
அந்த வகையில் தனியார் பள்ளிகள் 2013–14–ம் கல்வி ஆண்டில் செலவான தொகை ரூ.25.13 கோடி மற்றும் 2014–15–ம் ஆண்டு செலவான ரூ.71.91 கோடியை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக மாநில திட்ட இயக்குனர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு 18–10–2013 ல் கடிதம் எழுதினார்.
 
ஆனால் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. இருந்த போதிலும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2014–15 ஆம் கல்வி ஆண்டில் 86,729 குழந்தைகள் சேர்க்கப்பட்டனர்.
 
இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி அரசு உதவி பெறாத பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 25 சதவீத மாணவர்களுக்கான செலவுத் தொகை சர்வ சிக்சா அபியான் சட்டத்துக்கு உட்பட்டே வழங்கப்படும் என்றும், அது 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
 
மேலும் இந்த உதவித் தொகை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வ சிக்சா அபியானில் செய்யப்பட்ட இந்த மாற்றம் காரணமாக 2013–14 ஆம் ஆண்டு செலவிடப்பட்ட தொகை ரூ.25.13 கோடி ஏற்கப்படவில்லை.
 
மேலும் 2014–15 ஆம் கல்வி ஆண்டில் செலவிடப்பட்ட ரூ.71.57 கோடி ரூபாயும் வழங்கப்படவில்லை. அந்த தொகை பெறும் 14 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இது கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12(1) (சி) விதியை மீறுவதாக உள்ளது.
 
தமிழ்நாட்டில் பிரி–கேஜி வகுப்பில் சேர்க்காமல் ஒரு பள்ளியில் முதலாம் வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பது என்பது மிகவும் கடினமானது. இந்த நிலையில் சர்வ சிக்சா அபியான் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது ஏழை குழந்தைகளை மிகவும் பாதிக்கும்.
 
தமிழ்நாட்டின் தனியார் பள்ளிகள் செலவு செய்துள்ள தொகை ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால், தொடர்ந்து ஏழை குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர முடியாத நிலை ஏற்படும். மேலும் இந்த நிதிச்சுமை முழுமையாக மாநில அரசு மீதே விழும்.
 
இது தவிர கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்ற தோற்றம் ஏற்படும். எனவே இந்த நிலையை மாற்ற உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் மூலம் ஏழை குழந்தைகள் படிப்பு தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.
 
இல்லையெனில் 25 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 1,36,593 குழந்தைகளின் எதிர்கால படிப்பு பாதிக்கப்படும். என்றாலும் ஏழை குழந்தைகளின் 25 சதவீத இட ஒதுக்கீடு 2015–16 ஆம் நிதி ஆண்டிலும் தொடரும்.
 
எனவே கடந்த ஆண்டுகளில் கல்வி பெறும் உரிமை சட்டப்படி செலவிடப்பட்ட ரூ.97.04 கோடியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதோடு சர்வ சிக்சா அபியான் அமைப்பில் செய்யப்பட்ட ஒரு தலைபட்சமான மாற்றங்களை கைவிட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.