1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2014 (13:52 IST)

வாக்குப்பதிவு தீவிரமாக கண்காணிக்கப்படும் - பிரவீன்குமார்

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல்  தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளதாக, சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
 
வாக்குப்பதிவை தீவிரமாக கண்காணிக்க உள்ளளோம். வாக்குச்சாவடி முதன்மை அதிகாரி இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குப்பதிவு சதவீதம் தொடர்பான தகவலை அனுப்புவார். அது இணையதளத்தில் உடனுக்குடன் ஏற்றப்படும். 18ஆயிரம் வாக்குச்சாவடிகளை வெப்காஸ்டிங் மூலம் நேரடியாக ஒளிபரப்பவுள்ளோம். இதை நானும், மாவட்ட ஆட்சியரும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிப்போம். வேட்பாளர்களும், பத்திரிகையாளர்களும் அதைக்காண வசதிகள் செய்யப்படும்.
 
வாக்குச்சாவடியில் ஏற்படும் சிக்கலை நேரில் கண்டு, அதற்கு தீர்வுகாண இது வழிவகை செய்யும். மேலும், வாக்குச்சாவடிகளை வீடியோ படம் பிடித்து சி.டி.யாக பதிவு செய்யவுள்ளோம். மண்டல குழுக்கள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட 10 அல்லது 12 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கண்காணிப்பார்கள். அதுபற்றிய தகவல்களை தொலைபேசியில் சொல்லுவார்கள்.
 
3 மக்களவை தொகுதிக்கு ஒரு வருவாய் கோட்டாட்சியரை நியமித்துள்ளோம். அந்த வகையில் 19 வருவாய் கோட்டாட்சியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் அந்தத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளின் நிலவரங்களை அறிந்து, அதற்கென்று அமைக்கப்பட்டுள்ள தனி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களைச் சொல்லுவார்கள். இந்த தகவல் அனைத்தும் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுப்பப்படும். பொதுவாக, PI, PS என்று தகவல் கொடுப்பார்கள். PI என்றால் வாக்குப்பதிவு தடைபட்டுள்ளது என்றும் PS என்றால் பிரச்சனை தீர்க்கப்பட்டது என்றும் பொருள்.
 
வாக்குச்சாவடிகளுக்குள் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் செல்லலாம். 42 வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் 42 ஏஜெண்டுகளும் சென்றால்கூட, அவர்களுக்கு இடம் தரப்பட வேண்டும். இவர்களில் முக்கிய ஏஜெண்டு, துணை ஏஜெண்டு என்று இரண்டு பேரில் ஒருவர் உள்ளே வரலாம். முக்கிய ஏஜெண்டு வெளியே செல்லும் நேரத்தில் துணை ஏஜெண்டு இருக்க வேண்டும்.
 
ஆனால் பிற்பகல் 3 மணிக்கு பிறகு வாக்குச்சாவடியை விட்டு முக்கிய ஏஜெண்டு வெளியே செல்லக்கூடாது. வாக்குப்பதிவு எந்திரம் சீல் வைக்கப்பட்டு வெளியே கொண்டு செல்லப்படும்வரை அவர் அங்கேயே இருக்க வேண்டும். அவரிடமிருந்து, ஒரு துண்டு சீட்டுக்கூட வெளியே போக அனுமதிக்கப்பட மாட்டாது என்று கூறினார்.
 
மேலும் அவர், வாக்குச்சாவடிகளுக்கு 23ஆம் தேதி (இன்று) மாலை வாக்கு எந்திரங்கள் கொண்டு செல்லப்படும். மலைப்பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு முன்னதாகவே அவை கொண்டு செல்லப்படும். வாக்குச்சாவடிகளுக்கு 100 மீட்டர் தூரத்துக்குள் வாகனங்கள் வரக்கூடாது. இந்த எல்லைப்பகுதிக்குள் குடித்துவிட்டு தகராறு செய்தால், குற்றவழக்கு தொடரப்படும்.
 
வாக்குப்பதிவின்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் அரை மணிநேரத்திலிந்து ஒரு மணிநேரத்துக்குள் வேறு எந்திரம் வைக்கப்படும். 24 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி வளாகத்துக்குள் நுழைந்தவர்கள், இரவு எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து வாக்குப்பதிவு செய்யலாம் என்று பிரவீன்குமார் தெரிவித்தார்.