1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2017 (15:51 IST)

’நாங்கள் ஆம்பிளைகள் என்பதை காட்டட்டுமா?’ - பெண்களிடம் வீராப்பு காட்டிய போலீஸ்

சென்னை மேடவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடந்த மாதம் 31ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய போது அதில் கலந்து கொண்ட பெண்களிடம் காவல்துறையினர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.


 

கடந்த நவம்பர் 8ஆம் தேதி இரவு இந்திய பிரதமர் நரேந்திர மோடி திடீரென பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று வானொலி மூலம் அறிவித்தார். பிரதமரின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள், முதியோர் மற்றும் வங்கி ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைக் எதிராகவும் சனிக்கிழமையன்று (டிச. 31) சென்னை மேடவாக்கம் - மாம்பாக்கம் சந்திப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜனநாயக பூர்வமாக வாலிபர்கள் நடத்திய போராட்டத்தில் பள்ளிக் கரணை காவல்துறை அத்துமீறி, அராஜக தாக்குதலில் ஈடுபட்டது. போராட்ட வீரர்களை குறிவைத்து - பெண்கள் என்றும் பாராமல் பகிரங்கமாக உடைகளை களைந்தும், இழிவார்த்தைகளை இடைவிடாமல் பிரயோகித்தும் ஆண் காவலர்களே கடுமையாக தாக்கியுள்ளனர்.

அப்போது பள்ளிக் கரணை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவி போராட்டத்தில் பங்கெடுத்த இளம்பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டி வன்முறையில் ஈடுபட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் நெருங்கி, ‘நாங்கள் இப்போது ஆம்பிளைகள் என்பதைக் காட்டட்டுமா? என்று கூறி அவர்களுக்கு உளவியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளனர்.

ஒரு பெண்ணின் மார்பில் ஒரு அதிகாரி கை வைத்துள்ளார். கட்சிக் கொடியை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்திருந்த அந்தப் பெண்ணிடம் இருந்து கொடியைப் பறிப்பது போல மார்பில் கைவத்து, மானபங்கம் படுத்தும் வகையில் தகாத செயலில் ஈடுபட்டுள்ளனர்.

டி சர்ட் அணிந்திருந்த மற்றொரு பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அந்த அதிகாரி, “இப்படியெல்லாம் டிரஸ் பண்ணிட்டு வந்தால் கை வைக்கத்தான் தோணும். நான் என் பேன்ட்டைக் கழற்றிட்டு வரட்டுமா” என்று கேட்டுள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பு அருகில் வலுவாகக் கட்டையால் அடித்துள்ளார்கள். அவரால் நடக்கவோ, கழிப்பறை செல்லவோ கூட முடியாதவாறு தாக்கியுள்ளனர்.


 

தவிர கைது செய்த பெண்களிடம் இருந்த அலைபேசிகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், அலைபேசியில் இருந்த ஆண் தோழர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை காண்பித்து, “அவனோடு உனக்கு என்ன தொடர்பு... அவன் கூடத்தான் படுப்பியா,” என்றெல்லாம் கேட்டு, அச்சிலேற்ற முடியாத சொற்களால் நாகரிகமற்ற சொற்களால் கேவலப்படுத்தி உள்ளனர்.

ஆய்வாளர் ரவி, ஒரு பெண்ணிடம், ‘எனக்கு உன் வயதில் மகள் இருக்கிறாள்’ என்று கூறி அப்பெண்ணின் மார்பை கசக்கியுள்ளார். மேலும் மற்ற பெண்களிடம் இல்லாதது உங்களிடம் என்ன இருக்கிறது என்று பார்த்துவிடலாம் என்றும் கூறி பாலியல் வசைச் சொற்களால் பேசியுள்ளனர்.

அதோடு, சங்க நிர்வாகிகளை போராட்டத்தில் இனி ஈடுபடக்கூடாது என்பதற்காக பெயரைக் கேட்டு கேட்டு அடித்துள்ளனர். வழக்கமான லத்திக்கம்பு மட்டுமல்லாமல் கொய்யா மரக்கட்டை, தடிமனான இரும்புக் கம்பி, கனத்த கேபிள் குழாய் முதலியவை பயன்படுத்தி உள்ளனர்.

4 வாகனங்களில் காவலர்களுடன் வந்த பள்ளிக்கரணை ஆய்வாளர் நட்ராஜ் மற்றும் போலீசார் அனைவரும் காட்டுமிராண்டித்தனமாக அங்கு திரண்டிருந்த வாலிபர், மாணவர், இயக்கத்தினர் மீது கடுமையாக தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

“வாலிபர் சங்க மெம்பர்கள்னா என்ன பெரிய வீரர்கள்னு நினைப்பா, இப்ப உங்க வீரத்தைக் காட்டுங்க பார்க்கலாம்” என்று கேட்டபடி அடித்தார் ஒரு காவலர். “நாங்க 20 பேருக்குள்ள இருக்கிறோம், எங்களை 30 போலீஸ், 40 போலீஸ் சேர்ந்து அடிக்கிறீங்க, இதுதான் உங்கள் வீரமா” என்று போராட்ட வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

‘‘தலைவர்களை அடித்தால் மற்றவர்களும் பயப்படுவார்கள்,’’ என்று சொல்லிச் சொல்லியே அடித்திருக்கிறார்கள். ‘‘இதற்காகத்தான் நான் மூணு வருசமா காத்திருந்தேன்’’ என்றாராம் அதிகாரி நடராஜ்.

திருப்பிக் கேட்டவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் தொடர்ந்தது. அதை விட, ஒரு தோழரை எழுந்து நிற்க முடியாத அளவுக்கு அடித்து நொறுக்கியுள்ளனர். ஒரு அதிகாரி சட்டையைக் கழற்றிக் கிட்டே, “இப்ப என்னோட ஒத்தைக்கு மோதுறியா” என்று கேட்டு அடித்துள்ளார்.

மற்றொரு ஆட்டோ தொழிலாளி ராஜூவின் மண்டையில், 16 தையல்கள் போடுகிற அளவுக்குக் காயத்தை ஏற்படுத்தினர். ஒரு காவலர் அடிக்க, ஓடியவரை எதிரில் வந்த இன்னொரு காவலர் அடித்தார். கீழே விழுந்தவரை மாற்றி மாற்றி மிதித்துள்ளார்கள்.

இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை 6 வாரங்களுக்குள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டுமென்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.