ரயிலில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை - அதிகாரிகள் தீவிர விசாரணை
சேலத்தில் இருந்து சென்னை வந்த சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட ரூ.6 கோடி பணம் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளிலிருந்து சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் ஒன்றாகத் திரட்டப்பட்டு, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு அனுப்பப்பட்டன.
இவை அழிக்கப்படுவதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக 325 கோடி ரூபாய் பணம், 226 பெட்டிகளில் அடைக்கப்பட்டு சேலம் - சென்னை ரயிலில் ஏற்றப்பட்டது.
பணம் ஏற்றப்பட்டிருந்த பெட்டி, ரயில் எஞ்சினுக்கு அடுத்ததாக இணைக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்னை வந்து சேர்ந்தது.
காலை சுமார் 11 மணியளவில் பணத்தை இறக்குவதற்காக ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் ரயில்வே காவல்துறையினரும் பணம் இருந்த சரக்கு பெட்டியைத் திறந்தபோது, அதன் மேலே ஓர் ஆள் நுழையும் அளவுக்கு ஓட்டை போடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உள்ளே இருந்த பணப் பெட்டிகளில் சில உடைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து ரயில்வே காவல்துறை விசாரணையில் இறங்கியது. உடைக்கப்பட்ட பெட்டிகளில் இருந்த சேதமடைந்த ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கணக்கிடப்பட்டுவருகிறது. இதுவரை சுமார் 5.75 கோடி ரூபாய் அளவுக்கு பணம் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து பணம் கணக்கிடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விசாரிக்க சென்னையில் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் உள்ளடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருச்சியில் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணத்திற்கு துணையாக ஒரு காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஓர் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் அதே ரயிலில் பயணம் செய்தும், பணம் கொள்ளை போயிருப்பதாக ரயில்வே காவல் துறையின் ஐஜி ராமசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சேலத்திலிருந்து சென்னை வரும் ரயில் பத்து இடங்களில் நின்று வருகிறது. விருத்தாசலத்தில் ரயில் எஞ்சினை மாற்றுவதற்காக சுமார் 45 நிமிடங்கள் வரை ரயில் நிற்கும்.
தவிர, சென்னைக்கு அதிகாலை ரயில் வந்துவிட்ட நிலையிலும், காலை 11 மணியளவில்தான் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்திருப்பதால், எந்த இடத்தில் ரயில் பெட்டியின் மேலே ஓட்டை போடப்பட்டது என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
8 தனிப்படையினர், கொள்ளையர்களை தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 காவலர்களிடமும் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்துகிறார்கள்.