வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (12:57 IST)

ஜெ. இல்லாத போயஸ் கார்டனின் தற்போதைய நிலை

உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.


 

 
இந்நிலையில், அவர் வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் வீட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய மாற்றங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
முதல்வ்வர் ஜெயலலிதா, சென்னையில் வி.வி.ஐ.பிக்கள் வாழும் பகுதியான போயஸ் கார்டனில் எண். 81, வேதா நிலையம் எனும் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். 
 
எப்போதும் பரபரப்புடன் காணப்படும் போயஸ் கார்டனில் தற்போது பரபரப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. அந்த வழியாக யார் சென்றாலும், போலீசார் துருவி துருவி விசாரிக்கும் அதே வழக்கமான கெடுபிடிகள் அங்கு காணப்படுகிறது.
 
முதல்வர் ஜெயலலிதா வீட்டிலிருந்து வெளியே வரும் போதும், உள்ளே நுழையும் போதும் அவரின் கடைக்கண் பார்வை தன்மேல் படாதா என காத்திருக்கும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தற்போது அங்கு இல்லை.


 

 
தன்னுடைய காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்தவாறு, புன்னகைத்துக் கொண்டே தொண்டர்களையும், மக்களையும் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்து, மெல்லிய புன்னகையோடு இரட்டை இலை சின்னத்தை விரல்களால் காட்டி கடந்து செல்லும் ஜெயலலிதா தற்போது இல்லை. அவர் கடந்து செல்கையில் ஒலிக்கும் கோஷங்கள் எதுவும் இப்போது அங்கே இல்லை.
 
கவலை தோய்ந்த முகத்துடன் சில தொண்டர்களும், வேதா நிலைத்திலிருந்து என்ன தகவல் வரும், யாரெல்லாம் உள்ளே, வெளியே செல்கிறார்கள் என்ற கண்காணிக்க சில பத்திரிக்கையாளர்களும் அங்கு கூடியுள்ளனர்.
 
வழக்கத்திற்கு மாறாக ஜெ.வின் கார் நிற்கும் போர்டிகோவில் சசிகலாவின் பென்ஸ். எம்.எல். வகை கார் நின்று கொண்டிருக்கிறது.
 
வேதா நிலையத்தில் அவர் பெரும்பாலும் இருக்கும் முதல் மாடியில் தற்போது யாரும் இல்லை. சசிகலா மட்டும் அவ்வப்போது அங்கு சென்று வருகிறார்.
 
சசிகலாவும், இளவரசியும் அவர்களின் அறையிலிருந்து வெளியே வருவதில்லை. வேதா நிலையத்தில் மயான அமைதி நிலவுகிறது. அந்த வீட்டில் பணிபுரிந்தவர்கள் ஜெயலலிதா இன்னும் அங்கு இருப்பதாக நினைவுகளை சுமந்தபடி இருக்கின்றனர்.
 
ஜெயலலிதாவின் உதவியாளர்கள் பூங்குன்றன், நந்தகுமார் ஆகியோரை தற்போது அங்கு பார்க்க முடியவில்லை.
 
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  மூத்த அமைச்சர்கள் மற்றும் சில மூத்த தமிழக அரசு அதிகாரிகள் நேற்று சசிகலாவை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
 
அதிமுக செயற்குழு  மற்றும் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளதால், யார் அடுத்த பொதுச்செயலாளர்?.. கட்சியை எப்படி வழி நடத்திச் செல்வது... என்பது குறித்து விவாதிக்க பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.