1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 23 ஜூன் 2019 (18:15 IST)

இனிமேல் விவாதங்கள் கிடையாது: பாமக ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு

இனிமேல் ஊடகங்களில் நடத்தப்படும் விவாதங்களில் பாமகவினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவருடைய முடிவிற்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 
செய்தி தொலைக்காட்சிகளில் தற்போது விவாத மேடை என்ற புதிய கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதில் விவாதத்தில் கலந்து கொள்ள வருபவர்களின் முழு கருத்தை நெறியாளர் கேட்பதே இல்லை. அவரை மடக்கும் வகையில் கேள்வி கேட்பது, அவரை தர்மசங்கடப்படுத்துவது, பரபரப்புக்காக என்றே பொய்யான கருத்தை திணிப்பது ஆகியவையே அதிகமாக இருக்கும். மேலும் ஒருவர் ஆக்கபூர்வமான கருத்தை தெரிவிக்க முன்வரும்போது திடீரென விளம்பர இடைவேளைக்கு பின் விவாதம் தொடரும் என்று நெறியாளர் கூறி அவர் சொல்ல வந்ததை சாமர்த்தியமாக தடுத்துவிடுவார். 
 
இந்த நிலையில் இனிமேல் எந்த ஊடகங்களிலும் பாமகவினர் விவாதங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பாமக ராமதாஸ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: செய்தித் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாதங்களில் நடுநிலையையும், அறத்தையும் பூதக்கண்ணாடி வைத்து தான் தேட வேண்டியிருக்கிறது. ஊடகங்களில் நடுநிலை திரும்பும் வரை ஊடக விவாதங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள்.
 
இதே முடிவை அனைத்து கட்சியினர்களும் எடுத்தால் ஊடகங்களில் விவாதம் என்ற தலைவலி முடிவுக்கு வந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.