1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : ஞாயிறு, 18 மே 2014 (18:05 IST)

பணம் வெள்ளமாக பாய்ந்த போதும் தருமபுரியில் அன்புமணி வெற்றி - ராமதாஸ் மகிழ்ச்சி

பணம் வெள்ளமாக பாய்ந்த போதும் தருமபுரியில் அன்புமணி வெற்றி பெற்றிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், தருமபுரி தொகுதி மக்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 77 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
 
பாமக போட்டியிட்ட மற்ற தொகுதிகளின் முடிவுகள் மன நிறைவளிக்கும் வகையில் இல்லாவிட்டாலும், தருமபுரி தொகுதி முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.
 
நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் பணம் ஆறாக ஓடியது என்றால், தருமபுரியில் மட்டும் வெள்ளமாக பாய்ந்தது. அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதையே முக்கிய இலக்காக கொண்டு செயலாற்றிய ஆளுங்கட்சியினர், அதற்காக எந்தளவுக்கு விதிகளை மீறி செயல்பட முடியுமோ, அந்த அளவுக்கு விதிகளை மீறினார்கள்.

ஓட்டுக்குப் பணம், அரசு எந்திரத்தின் தவறான பயன்பாடு, பாட்டாளி மக்கள் கட்சியினரை பணி செய்யவிடாமல் தடுத்தது என எத்தனையோ வழிகளில் பாமகவின் வெற்றிக்கு அணை போட அதிமுக முயன்றாலும், அவை அனைத்தையும் முறியடித்து அன்புமணி ராமதாஸை வெற்றி பெறச் செய்த தருமபுரி தொகுதி வாக்காளர்களுக்கு எந்த வகையில் நன்றிக்கடன் செலுத்துவது என்றே தெரியவில்லை.
 
கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே தருமபுரி தொகுதி மக்கள் பாமகவுக்கு ஆதரவாகவே இருந்து வந்திருக்கிறார்கள். தருமபுரி மக்களையும், பாமகவையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதும், தருமபுரி தொகுதி பாமகவின் இரும்புக் கோட்டை என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
 
அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியிருக்கும் தருமபுரி மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி, பாமக மீது தருமபுரி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம்; நன்றிக்கடன் செலுத்துவோம் என்று கூறி தருமபுரி தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கிருஷ்ணகிரி, சிதம்பரம், ஆரணி, அரக்கோணம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளிலும் பாமகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவர்களின் நம்பிக்கையை முழுமையாக பெறும் வகையில், இனிவரும் காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சி பணியாற்றும் என்றும் வாக்குறுதி அளிக்கிறேன்" என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.