வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2015 (14:57 IST)

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பினை மத்திய அரசே எடுத்துக் கொள்ள வேண்டு: கருணாநிதி வலியுறுத்தல

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், இவற்றின் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பினை மத்திய அரசே தன்னிடம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். 
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் என்பது வாரத்திற்கு ஒரு முறை நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. ஒரு முறை விலையைக் குறைத்தால், அதற்காக நாம் மகிழ்ச்சி அடைவதற்குள்ளாக; விலையை அதிகமாக்கிய அறிவிப்புகள் மூன்று முறை வருகின்றன.
 
உதாரணமாக கடந்த 16 ஆம் தேதி அன்றுதான் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 82 பைசாவும், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 61 பைசாவும் உயர்த்தப்பட்டது. 14 நாட்கள் தான் ஆகின்றன.
 
ஆனால் அதற்குள் இன்றையதினம் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 18 பைசா அளவுக்கும் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 9 பைசா அளவுக்கும் உயர்த்தி அறிவிப்பு வந்துள்ளது.
 
இதற்குக் காரணமாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பவும், இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்புக்கு ஏற்பவும், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கின்றன என்று கூறப்படுகிறது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தால், அதன் முழுப்பலனையும் நுகர்வோருக்கு வழங்கிட முன்வராத அரசாங்கம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும் போது மட்டும், அதனை அப்படியே நுகர்வோரின் தலையிலே சுமத்துவது எந்த வகையில் நியாயம் என்பதை மத்திய அரசுதான் விளக்க வேண்டும்.
 
மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு 6.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று நேற்று நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கும்போது, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெருமிதத்தோடு எடுத்துச் சொன்ன நேரத்தில், தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பையும் ஒரு காரணமாகச் சொல்வதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
கடந்த 2014ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்களிலிலிருந்து பெட்ரோல் விலை பத்து முறையும், அக்டோபர் மாதத்திலிருந்து டீசல் விலை ஆறு முறையும் குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி விலை குறைக்கப்பட்ட போதிலும், பிப்ரவரி 16 ஆம் தேதி ஒரு முறையும், தற்போது நேற்றையதினம் 28–2–2015 அன்று ஒரு முறையுமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
 
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பினை எண்ணெய் நிறுவனங்களிடம் அளித்து விட்ட காரணத்தால், தற்போது அந்த எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படியும், விலை உயர்வு சாதாரண, சாமான்ய மக்களின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ளாமலும் விலையை உயர்த்திக் கொண்டே போகின்றன.
 
எனவே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாக ஒரு முடிவினை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் காண்பதற்கு; பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பினை மத்திய அரசே தன்னிடம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.