1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2016 (13:41 IST)

பெட்ரோல் பங்க் 9-6 மணி வரை மட்டுமே இயங்கும் : அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்

பெட்ரோல் பங்க் 9-6 மணி வரை மட்டுமே இயங்கும் : அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்

நாளை (நவ.5ம் தேதி) முதல், பெட்ரோல் பங்குகளின் நேரம் குறைக்கப்படும் எனவும், வார விடுமுறை அளிக்கப்படும் எனவும் தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


 

 
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு, டீலர் கமிஷனை உயர்த்தி தருமாறு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.
 
அதை மத்திய அரசு அமைத்த கமிட்டி பரிந்துரை செய்தும், எண்ணெய் நிறுவனங்கள் அமுல்படுத்தவில்லை.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர். கடந்த மாதம் இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை பங்குகள் மூடப்பட்டன. 
 
இந்நிலையில், தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பின் தலைவர் முரளி செய்தியாளர்களிடம் பேசிய போது “டீலர் கமிஷன் தொடர்பாக, எண்ணைய் நிறுவனங்களிடம் மும்பையில் இன்று பேச்சு வார்த்தை நடக்கிறது. பேச்சில் உடன்பாடு எட்டவில்லை எனில், நாளை (நவ.5ம் தேதி) முதல் பெட்ரோல் பங்க் விற்பனை நேரம் குறைக்கப்படும். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க் இயங்கும். அதன் பின் வங்கிகள் போல் வாரவிடுமுறையும் விடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.