வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (12:10 IST)

பொள்ளாச்சி பயங்கரம் – திமுக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு !

பொள்ளாச்சியில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்து கொடுமைப்படுத்தியவர்களுக்கு எதிராக திமுக சார்பில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர்  பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

அதிமுக பிரமுகர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதால் அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சம்மந்தப்பட்டவர்களை அதிமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான குரல்கள் வலுவாக எழ ஆரம்பித்தன. இந்த குற்றவாளிக்கு எதிராக நீதிமன்றமே முன்வந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என திமுக சார்பில் இன்று திமுகவின் கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடக்க இருந்தது.

ஆனால்திமுகவின் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோட்டாட்சியர் மறுத்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாக கூறி திமுகப் போராட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அனுமதி மறுப்பு ஆளும்கட்சி மீதும் காவல்துறை மீதும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.