புதன், 25 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (09:15 IST)

பல பேர் உயிர் தப்பிய கதை!

சனிக்கிழமை மாலை 5.45 மணியளவில் சென்னையில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் திருப்பதி விரைவு ரயில், அரக்கோணம் அருகே உள்ள புளியமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது.


 


அப்போது, அரக்கோணம் ரயில் நிலையத்தில் நுழையும் முன் இருந்த சிக்னலில், நடைமேடை ஒன்று எனக் காட்டி இருக்கிறது, ஆனால் தண்டவாள இணைப்புகள் மூன்றாம் நடைமேடைக்குச் செல்வது போல் இருந்தது.  இதை ஓட்டுநர் கவனித்து ரயிலை, ரயில் நிலையத்துக்கு இரு கி.மீ. தொலைவுக்கு முன்னரே நிறுத்திவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து, அரக்கோணம் ரயில் நிலைய கண்காணிப்பாளர், நிலைய உதவி அதிகாரி, போக்குவரத்து ஆய்வாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து, சிக்னல் மூன்றாம் நடைமேடைக்கு மட்டுமே போடப்பட்டதாகவும், ஆனால் அதில் ஏற்பட்ட கோளாறால் சிக்னல் கம்பத்தில் ஒன்றாம் நடைமேடை எனக் காட்டப்பட்டதாகவும் ஓட்டுநரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

நடந்த தவறை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் மட்டுமே ரயிலை தொடர்ந்து இயக்கமுடியும் என ஓட்டுநர் தெரிவித்ததை அடுத்து அதிகாரிகள் எழுதிக் கொடுத்தனர். இதையடுத்து ரயில் அங்கிருந்து 45 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.30 மணிக்கு புறப்பட்டது.

அதிகாரிகள் இதுகுறித்து கூறியதாவது, “ரயில் தடம் மாறிச் சென்றிருந்தால் பெரும் விபத்து நேரிட்டு இருக்கலாம். எனினும் தடத்தில் தவறு இல்லை. சிக்னல் கம்ப அறிவிப்பில் மட்டும் கோளாறு ஏற்பட்டுள்ளது.” என்றார்.

இந்த சம்பவத்தை அடுத்து, சிக்னல் பிரிவில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் 45 நிமிடம் நின்றதால், பயணிகளில் பலர் ரயிலில் இருந்து இறங்கி அரக்கோணம் ரயில் நிலையத்தை நோக்கி நடந்து செல்லத் தொடங்கினர். மேலும் இந்த ரயிலுக்குப் பின்னால் வந்த சென்னை கடற்கரை - அரக்கோணம் மின்சார ரயில், சென்னை மங்களூர் அதிவேக விரைவு ரயில் ஆகியவையும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.