1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 25 அக்டோபர் 2014 (13:54 IST)

அடகுகடை அதிபர் கொலை-கொள்ளை வழக்கில் திடுக்கிடும் புதிய தகவல்கள்

சென்னை விருகம்பாக்கத்தில் அடகுகடை அதிபர் கொலை செய்யப்பட்டு, நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் இருவரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.
 
சென்னை விருகம்பாக்கம், ஆற்காடு ரோட்டில், வேம்புலி அம்மன் கோவில் அருகே, ஆனந்த் பேங்கர்ஸ் என்ற பெயரில் தங்க நகைகள் அடகு பிடிக்கும் அடகு கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் பெயர் ஹீராராம் (வயது 54). இவர் அதே பகுதியில், மேற்கு கே.கே.நகர், புது பங்காரு காலனியில் குடும்பத்துடன் வசிக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹீராராம், நீண்டகாலமாக அந்த பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார்.
 
கடந்த புதன்கிழமை தீபாவளி நாளில், ஹீராராம் அடகுகடையை திறந்து வைத்திருந்தார். மாலை 5.30 மணி அளவில்கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்து ஹீராராமை, அரிவாளால் வெட்டி போட்டுவிட்டு, அடகு கடையில் இருந்த சுமார் 60 சவரன் முதல் 100 சவரன் வரையிலான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த ஹீராராமை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்துபோனார். இதனால் இந்த சம்பவம் கொலை-கொள்ளைச் சம்பவமாகிவிட்டது.
 
இந்த சம்பவம் தொடர்பாக கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் திருஞானம், துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.
 
கொலை-கொள்ளை நடந்த அடகுகடையில் கைரேகை நிபுணர்கள், கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தனர். சம்பவம் நடந்த அடகு கடையில் கண்காணிப்பு கேமரா இல்லை. பக்கத்தில் உள்ள ஓட்டல் வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரின் உருவமும், காரில் வந்த 4 பேரின் உருவமும் பதிவாகி இருந்தது. அதை வைத்து கொள்ளையர்கள் யார் என்பதை காவல்துறையினர் துப்பு துலக்கி வருகிறார்கள்.
 
மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் மீதுதான் போலீசாருக்கு சந்தேகம் உள்ளது. அவர்கள் கொலை செய்யப்பட்ட ஹீராராமுக்கு நன்கு தெரிந்தவர்களாக இருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். மேலும் கொலையுண்ட ஹீராராமின் மகன் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. கேமராவில் பதிவாகி இருந்தவர்களின் புகைப்படத்தை காட்டி விசாரணை தீவிரமாக நடக்கிறது.
 
திருவண்ணாமலை, புதுச்சேரி, சென்னை மடிப்பாக்கம் போன்ற இடங்களில் இதுபோல அடகுகடைகளில் கொலை-கொள்ளைச் சம்பவங்கள் ஏற்கனவே நடந்துள்ளன. அந்த சம்பவங்களில் கைதானவர்கள், இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகளை இன்னும் ஓரிரு நாளில் பிடித்துவிடுவோம் என்று காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர். கொலையுண்ட ஹீராராமின் உடலுக்கு நேற்று முன்தினமே, இறுதி சடங்குகள் முடிந்துவிட்டது.