1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 ஜூலை 2019 (10:47 IST)

கராத்தே தியாகராஜன் மன்னிப்புக் கேட்க வேண்டும் – ப சிதம்பரம் பல்டி !

காங்கிரஸ் தமிழக தலைவர் கே எஸ் அழகிரிப் பற்றி  கராத்தே தியாகராஜன் கூறிய கருத்துகளில் தனக்கு உடன்பாடில்லை என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் கராத்தே தியாகராஜன், ‘உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்’ என்று பேசி திமுக – காங்கிரஸ் இடையே விரிசலை உண்டாக்கினார். இதற்கு எதிரிவினையாற்றிய திமுக திருச்சி மாவட்ட செயலாளர் கே என் நேரு,  ‘திமுக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்க வேண்டும்’ என முழங்கினார்.

இதுப் பலமாகக் கண்டனங்களை சந்தித்ததால் கராத்தே தியாகராஜன் தன்னிலை விளக்கம் அளித்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதுப் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றிப் பேசிய தியாகராஜன் ப சிதம்பரத்தை சந்தித்துவிட்டு அதன் பின் முடிவெடுப்பேன் எனக் கூறினார். இன்று சென்னை வந்த ப சிதம்பரத்தை சந்தித்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அதில் ‘காங்கிரஸ் தொண்டர்களுக்காக நான் பேசியது தவறா?.. தவறு என்றால் அந்த மேடையில் அமர்ந்திருந்த கே எஸ் அழகிரி அப்போதே ஏன் என்னைக் கண்டிக்கவில்லை. விளக்கம் கேட்டு எந்த வித ஷோகாஸ் நோட்டீஸும்  அனுப்பாமல் என்னை நீக்கியுள்ளனர். என்னை நீக்கியது தனக்குத் தெரியாது என்று சொல்லி வருகிறார் கே.எஸ். அழகிரி. அவருக்குத் தெரியாமல் எப்படி நடக்கும். அவர் திமுக மீது பழியைப் போடுகிறார். திமுகதான் அழுத்தம் கொடுத்தது என்று என்னிடமே அழகிரி சொல்கிறார். திமுகவிடம் நான் விசாரித்தால், நாங்கள் ஏன் இதில் தலையிடப் போகிறோம் எனக் கூறுகிறார்கள்.’ எனத் தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார்.

சிதம்பரத்தை சந்தித்த பின் இப்படி பேசியதால் அவரின் தூண்டுதலலாயே கராத்தே தியாகராஜன் இப்படி பேசியுள்ளார் என செய்திகள் வெளியாக அதை மறுக்கும் விதமாக ப சிதம்பரம் தனது டிவிட்டரில் ‘ கராத்தே தியாகராஜன் பேசியது திமுக- காங்கிரஸ் நல்லுறவுக்குப் பாதகமானவை. அவர் கூறியதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் அழகிரியை சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அவரை அறிவுறுத்தியுள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.