கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை - ப.சிதம்பரம் கண்டனம்
கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது விவசாயிகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கோதுமை விலை ஏறிக்கொண்டு வருவதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் .
இந்த நிலையில் கோதுமை ஏற்றுமதி தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் பிற நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கு கோதுமை தேவை இருந்தால் மத்திய அரசின் அனுமதியோடு ஏற்றுமதி செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது விவசாயிகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, கோதுமை ஏற்றுமதியை தடை செய்வது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை. இந்த அரசு விவசாயிகளிடம் ஒருபோதும் நட்புடன் இருந்ததில்லை.
மத்திய அரசு போதுமான அளவு கோதுமையை கொள்முதல் செய்ய தவறியதே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். சரியான அளவில் கொள்முதல் நடந்திருந்தால், கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என தெரிவித்துள்ளார்.