வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2016 (13:51 IST)

ப.சிதம்பரம், தங்கபாலு ஆதரவாளர்களுக்கு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை

விருப்ப மனு புறக்கணிப்பு காரணமாக ப.சிதம்பரம், தங்கபாலு ஆதரவாளர்களுக்கு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


 

 
இன்றும் சில மாதங்களில் தமிழக சட்டசபைக்குத் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தலில் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் விருப்ப மனு பெறப்படுவது சத்தியமூர்த்தி பவனில் தொடங்கியது.
 
இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு தலைவரின் ஆதரவாளர்களுக்காகவும் 10 மாவட்டங்களை உள்ளடக்கி 5 மண்டலங்களாக பிரித்து கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருடிந்தன.
 
விருப்ப மனுக்களைப் பெறுவதற்கான பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டனர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பில் நியமிக்கப்பட்டிருந்த பிரதிநிதி மட்டும் மனுக்களை பெற்றார்.
 
இந்நிலைரயில், ப.சிதம்பரம், தங்கபாலு, கே.கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், ஆகியோர் தரப்பில் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் மனுக்களை வாங்க வராமல் புறக்கணித்தனர்.
 
இது குறித்து காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விரும்புகிறவர்கள் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சென்னை சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் விருப்ப மனு வழங்கலாம் என்று அறிவித்து இருந்தோம்.
 
இந்த அறிவிப்பின்படி நூற்றுக்கணக்கானோர் முதல் நாளிலேயே விருப்ப மனுவை வழங்கி இருக்கிறார்கள்.
 
இந்நிலையில், விருப்ப மனுவை பெறுவது அகில இந்திய தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், புறக்கணிப்பதாக சிலர் விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகிற செயலாகும்.
 
பிப்ரவரி 6 ஆம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோருடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சந்தித்த போது விருப்ப மனு பெறுவதற்கு பிப்ரவரி 10 ஆம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டது.
 
எனவே ராகுல் காந்தி ஒப்புதல் வழங்கியதை விமர்சித்து பேசி வருவதை எவரும் அனுமதிக்க முடியாது.
 
தேர்தலை ஒரு சில மாதங்களில் சந்திக்க இருக்கின்ற நேரத்தில் கட்சியை பலகீனப்படுத்துகிற முயற்சியில் ஈடுபடுகிறவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியில் உட்பூசல் நீடித்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு அவர்கள் மத்தியில் மேலும் சிக்கல்லை ஏற்படுத்தும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.