செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 17 மார்ச் 2017 (12:54 IST)

ஓ.பி.எஸ் அணி வெல்லுமா? - 20ம் தேதி தேர்தல் கமிஷன் முக்கிய அறிவிப்பு?

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பான புகார் குறித்து, வருகிற 20ம் தேதி தேர்தல் கமிஷன் தனது முடிவை தெரிவிக்கும் எனக் கூறப்படுகிறது.


 

 
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என ஓ.,பி.எஸ் அணி தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தது. அதையடுத்து, தேர்தல் கமிஷன் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் சிறை முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கான பதில் மனு, சமீபத்தில் சசிகலாவின் சார்பில் தேர்தல் கமிஷனிடம் சமர்பிக்கப்பட்டது.  ஓ.பி.எஸ் அணியும் 61 பக்கங்கள் கொண்ட  பதில் மனுவை தாக்கல் செய்தது. 
 
அந்நிலையில், கடந்த 15ம் தேதி,  டெல்லிக்கு சென்ற  ஓ.பி.எஸ் அணி தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது எனவும், அதிமுக சட்ட விதிகளின் படி, இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கே சொந்தம் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, அதற்கான வலுவான ஆதாரங்களையும் சமர்பித்துள்ளது. 
 
அதேபோல், ஓ.பி.எஸ்-ஸின் திட்டத்தை முறியடிப்பதற்காக சசிகலாவின் சகோதரர் திவகரன் மற்றும் கணவர் நடராஜன் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு காய்களை நகர்த்தினர்.  தங்களுக்கு நெருக்கமான டெல்லி வாலாக்கள் மூலம், ஓ.பி.எஸ்-ன் திட்டத்தை முறியடித்து, சசிகலாவின் பொதுச்செயலர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை தங்கள் வசம் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.


 

 
ஏனெனில், சசிகலா நியமனம் செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டால், தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தது, ஓ.பி.எஸ் அணியினரை கட்சி மற்றும் பதவியிலிருந்து பறித்தது வரை, சசிகலாவின் எந்த நியமனமும் செல்லாமல் போய்விடும். ஓ.பி.எஸ் அணி மீண்டும் அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற முயலும். எனவே, அது நடந்து விடக்கூடாது என தினகரன் தரப்பு தீவிரமாக செயல்பட்டு வந்தது. 
 
மேலும், டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்த சசிகலா தரப்பு, ஓ.பி.எஸ் அணியினரின் கோரிக்கையை ஏற்க கூடாது எனவும், தற்காலிக பொதுச்செயலாளராக இருந்தாலும், விரைவில் தேர்தல் நடத்தி சசிகலாவ்வை நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்வோம் என வலியுறுத்தினர்.
 
இரு அணியினரின் விளக்கத்தையும் கேட்டுக் கொண்ட தேர்தல் கமிஷன், தனது முடிவை வருகிற திங்கட்கிழமை(20ம் தேதி) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக, வருகிற 24ம் தேதி, அரசியல் கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. எனவே, அதற்கு முன்பு தேர்தல் கமிஷனின் தீர்ப்பு வெளியாகி விட்டால், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தெரிந்து விடும்.  
 
இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ.பி.எஸ் மற்றும் சுதாகரன் அணி இரண்டுமே கூறி வருவதால், தேர்தல் கமிஷனின் தீர்ப்பை தமிழகம் ஆவலோடு எதிர்பார்க்கிறது. தேர்தல் கமிஷனின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே வரும் என ஓ.பி.எஸ் அணி திடமாக நம்பிக் கொண்டிருக்கிறது.
 
சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி தப்புமா?  இரட்டை இலை சின்னம் யாருக்கு? உண்மையான அதிமுக யார்? என்ற முக்கிய கேள்விகளுக்கு பதில் தேர்தல் கமிஷனின் தீர்ப்பில் இருக்கிறது.