தமிழக அரசு கொடுக்கும் அழுத்தம் போதாது - ஓபிஎஸ்!
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் அறிக்கை.
தனது அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சி அமையும் போது 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும். பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இது உறுதி. 8 மாதங்கள் பொறுத்திருங்கள். விடியல் பிறக்கும்" என்று சட்டமன்ற தேர்தலுக்கு முன் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, திமுக மவுனமாக இருந்தது. ஆளுநரைச் சந்தித்து பேசியிருக்கிறார்கள் என்றால், என்ன பேசப்பட்டது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நீட் விலக்கு மசோதா தமிழ்நாடை விட்டே செல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதற்கு சரியான தரவுகளை ஆளுநரிடம் எடுத்துரைக்காததே காரணமாகும்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ''2010-ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போதே, மத்திய காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டிருந்தால் இன்று 'நீட்'என்ற பிரச்சனையே வந்திருக்காது'' என்று கூறியுள்ளார்.
எனவே, ''தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் இதில் கவனம் செலுத்தி, மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுகொள்கிறேன்.'' என்று தனது அறிக்கையில் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.