வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : வெள்ளி, 21 நவம்பர் 2014 (16:19 IST)

ஐந்து மீனவர்களுக்கும் தலா மூன்று லட்சம் ரூபாய் - தமிழக அரசு நிதியுதவி

இலங்கையில் தூக்கு தண்டனையிலிருந்து மீண்டு, விடுதலை செய்யப்பட்ட ஐந்து மீனவர்களும் தங்கள் வாழ்க்கையைப் புதிதாக தொடங்குவதற்கு ஏதுவாக, ஒவ்வொருவருக்கும் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையைத் தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும் இது வரை இவர்களின் விடுதலைக்காகவும் பொதுவாக மீனவர்களின் நல்வாழ்வுக்காகவும் தமிழக அரசு செய்தவை என்னென்ன என்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துரைத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழர்களின் நலன் மற்றும் தமிழர் வாழ்வின் வளம் ஆகியவற்றுக்காக இடையறாது பாடுபட்டு வருபவர், புரட்சித் தலைவி அம்மா அவர்கள். விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்க, பலப்பல புதுமைத் திட்டங்களை வடிவமைத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் முறை ஆட்சிப் பொறுப்பை ஏற்ற புரட்சித் தலைவி அம்மா அவர்கள், தமிழக மக்கள் சிறப்புற, பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியுள்ளார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு, இந்தத் திட்டங்களைத் தொடர்ந்து செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது.
 
மிகவும் பழமை வாய்ந்த தொழில்களில் ஒன்றான மீன்பிடித் தொழில் மூலம் உயர்தர புரதச் சத்துடன் கூடிய தரமான உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்வதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டுவதிலும் தமிழக மீனவர்கள் முன்னோடியாக விளங்குகிறார்கள்.
 
மீனவர்களின் நலனில் தனி அக்கறை செலுத்தி வருபவர், புரட்சித் தலைவி அம்மா அவர்கள். எனவே தான் 2011ஆம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்ற அன்றே மீனவர்களின் நலன் பேணும் வகையில், மீனவர்களுக்கு மீன்பிடி தடைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை 1000 ரூபாயை 2000 ரூபாய் என இரட்டிப்பாக்கி உத்தரவிட்டார். மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் மீனவக் குடும்பங்களுக்கு 4000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் ஒரு புதிய திட்டத்தைப் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் செயல்படுத்தினார். 
 
கடல் மீனவ மகளிருக்கு மீன்பிடி குறைவாக உள்ள காலங்களில் 2,700 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம்; கடல் மீனவர்களுக்கான நிவாரணத் திட்டத்தின் கீழ் 2700 ரூபாய் உதவித் தொகை வழங்குதல் எனப் பல்வேறு நிவாரணத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிவாரணத் திட்டங்களுக்காக, ஆண்டொன்றுக்கு 166 கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும், மீனவர்களுக்கான குழுக் காப்பீடுத் திட்டத்தில் 50 விழுக்காடு சந்தாத் தொகையைத் தமிழ்நாடு அரசு செலுத்துகிறது. இதில் 6.51 லட்சம் மீனவர்கள் பயன் பெறுகின்றனர்.
 
பாரம்பரிய மீன்பிடிக் கலன்களை எந்திரமயமாக்கும் வகையில் நாட்டுப் படகுகளில் இயந்திரங்கள் வாங்கிப் பொருத்துவதற்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது. மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் எந்திரமயமாக்கப்பட்ட நாட்டுப் படகுகளில் பயன்படுத்தப்படும் டீசலுக்கு விற்பனை வரி அறவே விலக்களிக்கப்பட்டுள்ளது. நாட்டுப் படகுகளுக்கு மானிய விலையிலான மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் வீதம் மாதமொன்றுக்கு 250 லிட்டர் வழங்கப்படுகிறது.
 
மீனவர்கள் பிடித்து வரும் மீன்களின் தரத்தினைப் பாதுகாத்து, அவற்றின் மதிப்பினைக் கூட்டி மீனவர் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளான மீன்பிடித் துறைமுகங்கள், மீன்பிடி இறங்கு தளங்கள், மீன் பதனிடும் பூங்காக்கள் அமைத்தல் மற்றும் ஆற்று முகத்துவாரங்களை ஆழப்படுத்துதல் போன்ற பணிகள் 508 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், தொலைதூரக் கடல் பகுதியில் மீன் பிடிக்க ஏதுவாக, புதிய சூரை மீன் படகு கட்டுவதற்கு ஆகும் உத்தேச செலவான 60 லட்சம் ரூபாயில் 50 விழுக்காடு, அதாவது 30 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் ஒரு உன்னதமான திட்டத்தைக் கொண்டு வந்தவர், புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
மேலும்

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் போதெல்லாம் அவர்களை மீட்க இடைவிடாத நடவடிக்கைகளைப் புரட்சித் தலைவி அம்மா மேற்கொண்டுள்ளார்கள். 2011ஆம் ஆண்டு அஇஅதிமுக அரசு பொறுப்பேற்றது முதல் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு 56 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.
 
ஈரான் நாட்டுச் சிறையில் வாடிக் கொண்டிருந்த 16 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து, தமிழகம் திரும்பிய அவர்களுக்குப் புது வாழ்வு ஏற்படுத்த, 2 லட்சம் ரூபாயைப் புரட்சித் தலைவி அம்மா வழங்கினார்கள். ஒடிசா மாநிலத்தில் புயலில் சிக்கித் தவித்த 18 தமிழக மீனவர்களைப் பத்திரமாக மீட்டு, அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்கள். சவுதி அரேபியாவிற்கு வேலைக்குச் சென்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 மீனவர்களை மீட்டெடுக்க மத்திய அரசைத் தமிழக அரசு தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. 
 
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தான். எனவே, கச்சத் தீவைத் தாரை வார்த்த ஒப்பந்தங்கள் செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்கக் கோரி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தமிழக அரசின் வருவாய்த் துறையும் இவ்வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க இயலாமல் போனது, கச்சத் தீவு ஒப்பந்தத்தினால் தான். தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி விட்டார்கள் எனச் சிறை பிடிக்கப்படுவதும், மீனவர்கள் மீது பொய் வழக்குப் போடுவதும், பாரம்பரிய மீன்பிடி உரிமையை இழந்த காரணத்தால் தான்.
 
எனவே தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களும், அவர்கள் வழியில் செயல்படும் தமிழக அரசும், கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும், பராம்பரிய மீன்பிடி இடங்களில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்டுத் தர வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
 
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சேர்ந்த திருவாளர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லேங்க்லெட் ஆகிய ஐந்து மீனவர்கள் கடந்த 28.11.2011 அன்று மீன்பிடி விசைப்படகில் ராமேஸ்வரம் மீன்பிடி தளத்திலிருந்து புறப்பட்டு, தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்தனர்.
 
அவர்கள் மீது யாழ்ப்பாணம் மாகாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் போதைப் பொருள் கடத்துதல் குற்றத்திற்கான பிரிவின் கீழ், உள்நோக்கத்துடன் பொய் வழக்கு ஒன்றை இலங்கை அரசு தொடர்ந்தது. இந்த வழக்கு பொய்யாகப் புனையப்பட்ட வழக்கு என்பதால், கைது செய்யப்பட்ட ஐந்து அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், அப்போதைய பாரதப் பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியதோடு, இந்த ஐந்து மீனவர்களையும் விடுவிக்க மீனவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு இலங்கையைச் சார்ந்த வழக்கறிஞர் ஒருவரை நியமித்திடவும், அவர்களை விடுவிப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளவும் இராமேசுவரத்திலுள்ள நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு (Alliance for Release of Innocent Fishermen Trust) மூலம் நடவடிக்கை எடுத்திட, 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி 14.12.2011 அன்று ஆணையிட்டார்.
 
தமிழக அரசின் நிதியுதவியுடன் ஐந்து மீனவர்களை ஜாமீனில் விடுவிக்க 21.3.2012 அன்று யாழ்ப்பாணம் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது 11.6.2012 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மீனவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் இம்மீனவர்களின் குடும்பங்கள், வருமானம் ஈட்டித் தரும் தங்கள் குடும்பத் தலைவர்கள் சிறையில் உள்ள நிலையில், அன்றாட குடும்பச் செலவிற்கு வருமானமின்றி துன்பப்படுவதால், தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், குடும்பம் ஒன்றிற்கு அவர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து முன்தேதியிட்டு மாதந்தோறும் 7,500/- ரூபாய் வழங்கிட 6.8.2012 அன்று ஆணையிட்டார். தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின் அடிப்படையில் மேற்படி ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 2,44,000/- ரூபாய் வீதம் மொத்தம் 12,20,000/- ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
 
பொய் வழக்கில் சிக்கி அல்லலுறும் ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், இக் குடும்பங்களின் பொருளாதார நிலையைக் கருணையுடன் பரிசீலித்து ஐந்து மீனவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, நிவாரண உதவித் தொகையாகத் தலா ரூபாய் இரண்டு லட்சம் வீதம் மொத்தம் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஐந்து மீனவர்களின் குடும்பத்தினருக்கும் 13.12.2012 அன்று வழங்கினார்.
மேலும்

இந்த ஐந்து மீனவர்களை மீட்டெடுக்கும் உறுதியுடன் பல்வேறு ராஜாங்க மற்றும் சட்ட ரீதியான தொடர் நடவடிக்கைகளை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்டார். இந்த வழக்கினைத் தொய்வின்றி நடத்திடும் பொருட்டு, கூடுதல் நிதியாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கிட 8.2.2013 அன்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆணையிட்டார்.
 
அதாவது, வழக்குச் செலவிற்காக மட்டும் மொத்தம் 5 லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப நிதியுதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 4,49,000/-ரூபாய் வீதம் 27,45,000/- ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேல்முறையீட்டுக்காக வழங்கப்பட்ட 20 லட்சம் ரூபாயும் சேர்த்து மொத்தம் வழங்கப்பட்ட தொகை 47,45,000/- ரூபாய்.
 
ஐந்து மீனவர்களின் கைதுக்குப் பின்னர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு, மீனவர்கள் கைது மற்றும் தாக்குதல் தொடர்பாக எழுதியுள்ள 9 கடிதங்களில், பொய்யாகப் புனையப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு அல்லலுறும் மீனவர்களின் நிலையையும், அவர்களின்றி வாடும் அவர்களது குடும்பங்களின் பரிதாப நிலையினையும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் நேரிடை கவனத்திற்குக் கொண்டு சென்று, ஏதுமறியா அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களது குடும்பங்களுடன் ஒன்று சேர்த்திட, உயர் மட்ட தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
 
இலங்கை-தமிழக மீனவர்களுக்கிடையேயான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை கொழும்பில் 12-5-2014 அன்று நடைபெற்ற போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையின் அடிப்படையில் தமிழகம் சார்பில் இலங்கை - தமிழ்நாடு மீனவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மீனவ பிரதிநிதிகள், குழு மற்றும் அரசு அலுவலர்கள் இலங்கையின் வெளிக்கடை சிறையில் வாடும் மேற்படி ஐந்து மீனவர்களை நேரில் சந்தித்து, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அவர்கள் அம்மீனவர்களை விடுவிப்பதற்காக மேற்கொள்ளும் அனைத்துத் தொடர் நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
 
போதைப் பொருள் கடத்தியதாக புனையப்பட்ட வழக்கில் 5 அப்பாவி தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் 30.10.2014 அன்று தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக 5 அப்பாவி தமிழக மீனவர்களின் உயிரினைக் காக்கவும், அவர்கள் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்ப உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவும் மத்திய அரசினைத் தமிழக அரசு கேட்டுக்கொண்டது. மேலும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் உரிய மேல் முறையீடு செய்திட இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தினைப் பணிக்கவும் மத்திய அரசைத் தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதன் விளைவாக இலங்கை உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இவ்வழக்கினை நடத்திட கொழும்புவிலுள்ள இந்திய தூதரகம் வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவினை இறுதி செய்தது. இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்குச் செலவுக்காக 20 லட்சம் ரூபாயைத் தமிழக அரசு வழங்கியது. 
 
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட இடைவிடாத் தொடர் முயற்சிகளின் காரணமாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின்படி 5 மீனவர்களும் இலங்கை அரசால் 19.11.2014 அன்று விடுவிக்கப்பட்டு, 20.11.2014 அன்று தாயகம் திரும்பியுள்ளார்கள். இவர்கள் அனைவரும் நேற்று நள்ளிரவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த போது, மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் திருமதி. பா.வளர்மதி, மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தரராஜ் ஆகியோர் அவர்களை வரவேற்றனர்.
 
மேலும் அப்போது இந்த 5 மீனவர்கள் தங்கள் வாழ்க்கையைப் புதிதாக தொடங்குவதற்கு ஏதுவாக, ஒவ்வொருவருக்கும் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையைத் தமிழக அரசின் சார்பில் வழங்கினர். விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் அவர்களது சொந்த ஊருக்குத் தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
 
தமிழ்நாடு மீனவர்களின் நலன் காப்பதில் எப்போதும் முன் நிற்பவர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். மீனவர்கள் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவது அஇஅதிமுக அரசு தான். இலங்கை அரசால் பொய் வழக்கு போடப்பட்ட உடனேயே, அந்தப் பொய் வழக்கினை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தவர், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தான். இது பன்னாட்டுப் பிரச்சனை என்ற காரணத்தால், இலங்கை அரசுடன் தமிழ்நாடு அரசு நேரடியாக எந்த விதத்திலும் தொடர்புகொள்ள இயலாது. இலங்கை அரசுடன் மத்திய அரசும், வெளியுறவுத் துறையும் மட்டுமே தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க இயலும். தனது இந்தத் தார்மீகக் கடமையை மத்திய அரசு செயல்படுத்திட, தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களும், தமிழ்நாடு அரசும் ஆகும். அதற்கேற்ப, மத்திய அரசு செயல்பட்டு, 5 தமிழ்நாட்டு மீனவர்களும் விடுதலை பெற்றது மகிழ்ச்சிக்கு உரியதாகும். 
 
இந்த வேளையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்க முற்பட்டிருப்பது வேதனை அளிக்கக்கூடியது. 5 மீனவர்களின் விடுதலைக்குத் தாங்கள் தான் காரணமென இங்கே உள்ள ஒரு சிலர் மார்தட்டிக் கொள்வது, தமிழ்நாட்டு மீனவர்களைக் கொச்சைப்படுத்துவது ஆகும். தங்களால் தான் இது நடைபெற்றது என்று இங்கே தமிழ்நாட்டில் கூறிக்கொள்ளும் ஒரு சிலர், கடந்த மூன்றாண்டுகளாக இது பற்றி என்ன நடவடிக்கை எடுத்தனர்? இலங்கை உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட, 20 லட்சம் ரூபாய் அனுப்பும்படி இந்திய தூதரகம் கேட்ட போது, அந்தப் பணத்தை உடனடியாக அனுப்பி வைத்தது, மீனவர் நலனில் என்றும் அக்கறை செலுத்தும் அஇஅதிமுக அரசு தான். மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பினை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுத்தும் ஒரே இயக்கம் அஇஅதிமுக தான்; ஒரே அரசு அஇஅதிமுக அரசு தான்.
 
மீனவர்களின் நலனுக்காக எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராது, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் அரசு அஇஅதிமுக அரசு தான். மீனவர்கள் எந்தவித இன்னலுக்கு ஆட்பட்டாலும், ஓடோடிச் சென்று, அவர்கள் துயர் துடைப்பதும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பேணிப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் அஇஅதிமுக அரசுதான். உண்மையான மீனவ நண்பன் யார் என்பதும் தமிழ்நாடு மீனவர்களுக்கு நன்கு தெரியும். தமிழ்நாடு மீனவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.