அடிப்படை நடைமுறை கூட தெரியாதா?: தம்பிதுரையை வெளுத்து வாங்கிய ஓபிஎஸ்
பிரதமர் அலுவலக நடைமுறைகள் கூட தம்பிதுரைக்கு தெரியவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் காஞ்சிபுரம் மாவட்ட தொண்டர்களிடையே பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது:-
முதலமைச்சர் பதவியிலிருந்து விலகக் கோரி எனக்கு பல தரப்பிலிருந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது.ஜெயலலிதாவை வெளிநாட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றோம். ஆனால் அதற்கு அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவிற்கு தீவிர நோய் எதுவுமில்லை.
நான் உயிரோடு இருக்கும் வரை சசிகலா குடும்பத்தினர் யாரையும் கட்சிக்குள் சேர்க்க மாட்டேன் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் அவரது மரணத்திற்கு பின் ஜெயலலிதா விரட்டியடித்த அனைவரும் கட்சிக்குள் வந்து விட்டனர்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நான் டெல்லி சென்றேன். அப்போது திடீரென எந்த முன் அறிவிப்பும் இன்றி தம்பிதுரை அதிமுக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க அங்கு வந்தார். இதனால் பிரதமரை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. என்னுடன் தம்பிதுரையும் பிரதமரை சந்திக்க வரலாமா என்று நான் கேட்டபோதும் அனுமதி மறுத்தனர். பின்னர் தம்பிதுரையிடம் கோரிக்கை மனுவையாவது என்னிடம் கொடுங்கள். நான் கொடுக்கிறேன் என கூறினேன். ஆனால் தம்பிதுரை அதற்கு மறுத்துவிட்டார். ஒரு பிரதமரை எவ்வாறு சந்திப்பது என்ற நடைமுறை கூட தெரியாத ஒரு எம்.பியாகத்தான் தம்பிதுரை இவ்வளவு நாள் தனது காலத்தை ஓட்டியுள்ளார் என்றார்.