தர்மம் வெல்லும் : ஆளுநரை சந்தித்து விட்டு திரும்பிய ஓ.பி.எஸ் பேட்டி


Murugan| Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2017 (17:40 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆளுநர் வித்யாசாகர் ராவை தற்போது சந்தித்து விடு திரும்பியுள்ளார்.

 

 
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆட்சியை நடத்தப்போவது சசிகலாவா? அல்லது ஓ. பன்னீர் செல்வமா? என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. 
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக, அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு, பேருந்தில் ஏற்றப்பட்டு, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசாட்டிலும் ஏராளமான எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை சென்னை திரும்பினார். அதன்பின், தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்-ற்கு 5 மணிக்கும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு 7.30 மணிக்கும், ஆளுநர் நேரம் ஒதுக்கியிருந்தார்.
 
அதன்படி, ஓ.பி.எஸ் சரியாக 4.45 மணியளவில் ஆளுநர் மாளிகை அமைந்துள்ள ராஜ்பவனுக்கு சென்று, வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அவருடன் மதுசூதனன், கே.பி. முனுசாமி, பி.எச்.பாண்டியன் ஆகியோர் அவருடன் சென்றனர்.
 
அப்போது, சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கியதையும், தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் ஓபிஎஸ் தெரிவிப்பார் எனவும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதியும்  ஓபிஎஸ் அனுமதி கேட்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும், தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை சுதந்திரமாக செயல்பட விடாமல், சசிகலா தரப்பு சிறை வைத்திருப்பது பற்றியும் அவர் புகார் தெரிவிப்பார் எனக் கூறப்பட்டது.
 
எந்நிலையில், அரை மணி நேர சந்திப்பிற்கு பின், வீடு திரும்பிய ஓ.பி.எஸ், அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்த போது “தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து விரிவாக பேசியிருக்கிறேன். நம்பிக்கை இருக்கிறது... விரைவில் நல்லது நடக்கும்... தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மமே மறுபடி வெல்லும்” என்று மட்டும் கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :