1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 12 அக்டோபர் 2016 (09:19 IST)

இலாகா இல்லாத முதலமைச்சராக ஜெயலலிதா நீடிப்பார்: ஓ.பி.எஸ்.க்கு கூடுதல் பொறுப்பு!

இலாகா இல்லாத முதலமைச்சராக ஜெயலலிதா நீடிப்பார்: ஓ.பி.எஸ்.க்கு கூடுதல் பொறுப்பு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அனுமதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 3 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் பல நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என் கூறியது அப்பல்லோ மருத்துவமனை.


 
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா குணமாகி வீடு திரும்பும் வரை துணை முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வர் அல்லது தற்காலிக முதல்வர் என யாரையாவது நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வந்தது. குறிப்பாக அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்ட சக்தி அரசை இயக்க கூடாது என்ற சர்ச்சை எழுந்தது.
 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி மத்திய உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இவ்வாறு பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வந்த நிலையில் இவை எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று ஒரு அறிவிப்பு வெளியானது.
 
அதில், முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று வீடு திரும்பும் வரை அவரிடம் இருந்த அனைத்து இலாகாக்களையும் நிதியமைச்சர் பன்னீர் செல்வம் கவணிப்பார். முதல்வர் ஜெயலலிதா இலாகா இல்லாத முதலமைச்சராக நீடிப்பார். அமைச்சரவை கூட்டங்களுக்கு பன்னீர் செல்வமே தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின் பெயரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
கிட்டத்தட்ட தற்காலிக முதல்வருக்கு இணையான இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆளுநரின் இந்த அறிவிப்பை எதிர்கட்சிகள் உட்பட அனைத்து கட்சியினரும் வரவேற்றுள்ளனர்.