1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (09:00 IST)

இன்றுடன் ஒரு வருடம் நிறைவு: கட்சி கொடியேற்றினார் கமல்

கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கடந்த ஆண்டு இதே நாளில்தான் மதுரையில் தொடங்கினார். தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஒரு வருடத்தில் தமிழகம் முழுவதும் மக்களை நேரில் சந்தித்து தனது கட்சியை அவர் ஓரளவு வளர்த்துள்ளார் என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இதனை கொண்டாடும் வகையில் சற்றுமுன் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் கட்சியின் கொடியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஏற்றினார். இதன்பின்னர் நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் கிராம மீனவர்களுக்கு இன்று பிற்பகல் மீன்பிடி வலைகளை கமல் வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.

அதிமுக, திமுக தலைவர்களுடன் கருத்து மோதல், ரஜினியை மறைமுகமாக தாக்குதல், கஜா புயல் நேரத்தில் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல், அவ்வப்போது பிரதமர் மோடியையும் பாஜகவையும் தாக்குதல் என இந்த ஒரு வருடத்தில் கமல்ஹாசன் தனது கட்சியை நன்றாகவே கொண்டு செல்வதாக தெரிகிறது. இருப்பினும் ஒரு தேர்தலை அவர் சந்தித்தால்தான் மக்கள் அவர் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெரியவரும். வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போட்டியிட்டால் கமல் மீதும், அவரது கட்சி மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எந்த அளவுக்கு இருக்கின்றது என்பது தெரியவரும்