1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (10:02 IST)

ஓணம் திருநாள்: மலையாள மொழி பேசும் மக்களுக்கு கருணாநிதி வாழ்த்து

திராவிட மொழிகள் குடும்பத்தில் தமிழோடு மிக நெருங்கிய உறவு கொண்டுள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு திமுக சார்பில் ஓணம் திருநாள் வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
கேரள மாநில மக்களால் அறுவடைத் திருநாளாகப் பெரிய அளவில் கொண்டாடப்படும் ‘ஓணம் திருநாள்’ இன்று (28-8-2015) கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் உள்பட அம்மாநில மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
 
வீரமும், தீரமும், ஈரமும், கொடை நெஞ்சும் கொண்ட மாபலிச் சக்கரவர்த்தியை நேரில் நின்று வெல்ல முடியாதென்பதால், மகாவிஷ்ணு வாமன வடிவு கொண்டு, அவன் முன் தோன்றி மூன்றடி மண் வேண்டுமென இரந்து நிற்க, மாபலிச் சக்கரவர்த்தியும் மனமுவந்து அதனை ஈந்திட இசைந்திட, உடனே விசுவரூபம் கொண்டு ஓரடியை மண்ணிலும், இரண்டாம் அடியை விண்ணிலும் வைத்தபின் மூன்றாம் அடியை மாபலியின் தலையில் வைத்து அவனை அழித்தனன் என்று புராணம் கூறுகிறது.
 
புராணம் அப்படிக் கூறினாலும், அந்த மாமன்னன் மாபலிச் சக்கரவர்த்தியின்பால் மாறாத அன்பு கொண்ட மலையாள மக்கள் அவன் இந்த நாளில் தம் இல்லம் வருவான் எனும் நம்பிக்கையுடன் வீட்டினை அலங்கரித்து, வாயிலில் ‘அத்தப்பூ’ கோலமிட்டு, புத்தாடை புனைந்து மலையாள மண்ணின் கலைப் பண்பாட்டுச் சிறப்புகள் பூத்துக் குலுங்கிட கொண்டாடும் ஓணம் திருநாள், ஆணவம், அகம்பாவம், வஞ்சகம், சூது போன்ற கொடிய குணங்கள் மனித சமுதாயத்திலிருந்து களையப்பட வேண்டுமென்பதையும், பொறுமை, அன்பு, அமைதி, மாற்றாரைப் போற்றும் மகத்தான மனிதநேயம் முதலிய நற்பண்புகள் போற்றி வளர்க்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தும் உன்னதத் திருநாளாகும்.
 
பெருமைக்கு உரிய இந்த ஓணம் திருநாளைத் தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் சூழ சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என்பதற்காக, கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும், சென்னை மாவட்டத்திற்கும், 2006 ஆம் ஆண்டிலேயே, அன்றைய திமுக அரசினால் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.
 
இதனை நினைவுபடுத்தி, திராவிட மொழிகள் குடும்பத்தில் தமிழோடு மிக நெருங்கிய உறவு கொண்டுள்ள மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் எனது மனமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.