வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2016 (15:23 IST)

நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்

சென்னையை இன்று காலை உலுக்கியது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த இளம் பெண் படுகொலை. செங்கல்பட்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயதான சுவாதி என்ற இளம் பெண் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.


 
 
சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் சுவாதியை வேலைக்கு செல்ல காலை 7:30 மணியளவில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்டு சென்றார்.
 
சந்தான கோபாலகிருஷ்ணன் இறக்கிவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி கொலை செய்யப்பட்டார். பச்சை நிற டி-ஷர்ட்டும், கருப்பு நிற பேண்டும் அணிந்து வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் தான் கொண்டு வந்த பேக்கில் இருந்து கத்தியை எடுத்து சுவாதியின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளான்.
 
ஆள் நடமாட்டம் உள்ள, நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு சில மணித் துளிகளிலேயே தப்பியோடியுள்ளான். ரயில் நிலையத்தில் யாருமே கொலை செய்தவனை தடுக்கவில்லை, தாக்கி பிடிக்கவில்லை.
 
என்ன நடந்தது என உணர்வதற்குள்ளேயே அவன் தப்பித்து ஓடிவிட்டான் என கூறுகின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். 7.30 மணிக்கு படுகொலை நடந்தும் 8.30 மணி வரையிலும் சுவாதியின் உடல் ரயில் நிலையத்திலேயே இருந்துள்ளது.
 
காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதிலும் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. காலையில் தந்தை ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்ட சில நிமிடங்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில் நிலையத்தில் அவரது தந்தை கதறி அழுத காட்சி ரயில் பயணிகளிடம் அழுகையையே வரவைத்தது.
 
இதனையடுத்து சுவாதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் சுவாதியின் பேக்கையும், அவரது கைப்பேசியையும் கைப்பற்றிய காவல் துறையினர் சுவாதி கடைசியாக பேசிய அவரது ஆண் நண்பரை வரவழைத்து அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.