சனி, 14 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (13:41 IST)

எடப்பாடி பழனிசாமி உள்பட 31 பேருக்கு நோட்டிஸ்.! உயர்நீதிமன்றம் அதிரடி.! எதற்காக தெரியுமா.?

Edapadi
காவிரியில் நீர் எடுக்க அதிக குதிரை திறன் கொண்ட மின்மோட்டார்களை பயன்படுத்திய வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 31 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

சேலம் மாவட்டம், நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், காவிரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் எடுக்க ஏதுவாக, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம் என்ற சங்கம் துவங்கப்பட்டது. மேட்டூர் இடதுகரை பாசன கால்வாய் ஆயக்கட்டுதாரர்களான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் 18 பேரை சங்கத்தில் சேர்க்கப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கூடுதல் குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதி வழங்கி கடந்த 2020ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சேலம், வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
அந்த மனுவில், சங்கத்தில் சேர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர், 5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த மட்டுமே முடியும் என்ற நிலையில், 27 குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டார்களை பயன்படுத்த சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டது எனவும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், எவ்வளவு தண்ணீர் காவிரியில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதை அளவிட எந்த மீட்டரும் இல்லாமல், தொடர்ச்சியாக தண்ணீர் எடுக்கப்பட்டுப்பட்டதாகவும், இதுசம்பந்தமாக 2023ம் ஆண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தினர் காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பதை மீட்டர் பொருத்தி, கண்காணித்து முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 
இந்த வழக்கை இன்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, தமிழக அரசு, எடப்பாடி பழனிச்சாமி, அவரது உறவினர்கள் உள்பட 31 பேர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளது.