1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2015 (15:07 IST)

உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒன்றும் நடக்காது - ராமதாஸ் குற்றச்சாட்டு

வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒன்றும் நிகழப்போவதில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 9 மற்றும்  10 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
 
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.46,602 கோடி தொழில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கமணி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
 
இந்த தகவல் உண்மையாக இருந்தால் எந்தெந்த நிறுவனங்கள் எங்கெங்கு என்னென்ன தொழிற்சாலைகளை தொடங்கியுள்ளன? அவற்றில் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடும்படி பாமக வலியுறுத்தி இருந்தது. ஆனால், இன்று வரையில் தமிழக அரசிடமிருந்து இந்த வினாவிற்கு பதில் வரவில்லை.
 
உண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் தமிழகத்தில் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்ட முதலீட்டின் மதிப்பு ரூ.29,558 கோடி மட்டும் தான். இதில் கூட ரூ.10,660 கோடி மட்டுமே இதுவரை  முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. சூரிய ஒளி மின்திட்டத்திற்காக ரூ.4536 கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் ஒப்பந்தம் கையெழுத்திட்டதைத் தவிர, இதுவரை ஒரு பைசா கூட முதலீடு வரவில்லை.
 
கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் ரூ.25,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று அரசு தெரிவித்தது. ஆனால், அன்று நடந்த கூட்டத்தில் எந்த முதலீட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
 
வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் இதே கதை தான் தொடரப்போகிறது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவை.

ஆனால், தமிழகத்தில் அத்தகைய வசதிகள் இல்லை. சென்னை துறைமுகத்தை இணைப்பதற்கான மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டம் அரசியல் காரணங்களுக்காக முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றை இணைக்க உரிய கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.