திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2017 (12:27 IST)

என்னை யாராலும் மிரட்ட முடியாது: தினகரன் அதிரடி!

என்னை யாராலும் மிரட்ட முடியாது: தினகரன் அதிரடி!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கினார்கள். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற ஆளுநருக்கு கடிதமும் கொடுத்தனர்.


 
 
அதன் பின்னர் எம்எல்ஏக்களை தினகரன் தரப்பினர் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைத்தனர். இந்த சூழலில் தினகரன் கடந்த சில தினங்களாக ஊடகத்தினருக்கு பேட்டியளிக்காமல் மௌனமாக இருந்தார். ஆனால் அவருக்கு தொண்டையில் பிரச்சனை இருப்பதால் மருத்துவர்கள் சில நாட்கள் பேசாமல் இருக்க அறிவுறுத்தியதாக தினகரன் விளக்கம் கூறியிருந்தார்.
 
இதன் காரணமாக ஊடகத்தினரை சந்தித்து பேட்டியளிக்காமல் இருந்த தினகரன் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் இந்த முறை வழக்கம் போல அதிக நேரம் பேசாமல் ஒன்றிரண்டு கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார். தனக்கு தொண்டை பிரச்சனை இன்னமும் முழுமையாக சரியாகவில்லை என்பதால் அதிகமாக பேசமுடியாது என முன்னதாகவே அவர் கூறினார்.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், எங்களை யாராலும் மிரட்ட முடியாது. கடவுளை தவிர யாரும் எங்களை மிரட்ட முடியாது. கடவுளுக்கும், உண்மைக்கும் மட்டுமே நாங்கள் கட்டுப்படுவோம். 19 எம்எல்ஏக்களும் பயந்து விடுதியில் இல்லை சசிகலாவை நீக்குவேன் என கூறியவர்களுக்கு பாடம் புகட்ட அவர்கள் புதுச்சேரியில் உள்ளனர் என தெரிவித்தார்.