1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (08:12 IST)

காங்கிரஸ் - பாஜகவுடன் கூட்டணி இல்லை: தினகரன் அறிவிப்பு

தமிழகத்தில் அதிமுக, திமுகவை அடுத்து குறிப்பிடத்தக்க கட்சியாக உருவாகியுள்ளது தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். திருவாரூர் இடைத்தேர்தல் அறிவித்தவுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயங்கிய நிலையில் தினகரன் மட்டுமே தேர்தலை சந்திக்க ஆர்வம் காட்டினார். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தமிழக அரசியலில் தினகரன் ஒரு வளரும் தலைவராக உருவாகி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜகவுடன் தினகரன் கட்சி கூட்டு வைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்கனவே உருவாகிவிட்ட நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால் காங்கிரஸ் கூட்டணியில் இணைவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் வரும் பாராளுமன்ற தேர்தலை மாநில கட்சிகள் சிலவற்றுடன் கூட்டணி வைத்து சந்திக்கவிருப்பதாக தினகரன் அறிவித்துள்ளார்.

ஜிகே வாசனின் தமாக, விஜயகாந்தின் தேமுதிக, மற்றும் பாமக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு குறைவு என்பதும், பாஜகவுடன் கூட்டணி வைத்தால் வாக்கு சதவீதத்தை இழக்க நேரிடும் என்பதாலும் அமமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது