வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 4 ஜூலை 2015 (00:07 IST)

மத்திய அரசு என்.எல்.சி. தொழிற்சங்கங்களுடன் உடனே நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஜி.கே.வாசன் கோரிக்கை

மத்திய அரசு நேரடியாக என்.எல்.சி.நிறுவனத்துடன், தொழிற்சங்கங்களுடனும் உடனே பேச்சு வார்த்தை நடத்தி தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த 1957ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர்ல் பெருந்தலைவர் காமராஜர் அவர்களது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது.
 
இந்நிறுவனத்திற்கான நிலம், உழைப்பு அனைத்தும் தமிழகத்தைச் சார்ந்தே உள்ளதால் இலாபத்தை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அன்றைய பாரதப் பிரதமர் அவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கோரிக்கை வைத்தார்.
 
இந்த நிறுவனம் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு சுமார் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரத்தில் சுமார் ஆயிரத்து 100 மெகா வாட் தமிழகத்திற்கும், மீதமுள்ள 60 சதவீத மின்சாரம் பிற மாநிலங்களுக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.
 
இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்திற்கும், அந்நிறுவனம் பெற்ற நவரத்னா அந்தஸ்திற்கும் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் தான் மிக முக்கிய காரணம்.
 
எனவே, தொழிலாளர்களின் கோரிக்கையை என்.எல்.சி. நிர்வாகம் புறம் தள்ளி, இது குறித்து, நீதிமன்றத்தை அணுகி அவர்களது போராட்டத்திற்கு தடை வாங்கியுள்ளது. ஆனால் நிர்வாகம் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்து தொழிலாளர்களையும், தொழிற்சங்க பிரதிநிதிகளையும் அழைத்து நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும்.
 
ஆனால், இது வரை 22 கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில் என்.எல்.சி தொழிற்சங்கங்கள் ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர்பாக இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், 18ஆம் தேதி அன்று, உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர். இப்போராட்டம் நடைபெற்றால், மின் உற்பத்தி பாதிப்பதோடு, சுரங்கங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
 
என்.எல்.சியின் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால் தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு மேலும் அதிகமாகும். இதனால், விவசாயம், தொழில் பாதிப்பதோடு, பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்படும்.
 
எனவே, தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி என்.எல்.சி. பணியாளர்களுக்கு சுமூக தீர்வு கிடைத்திட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
 
மேலும், மத்திய அரசு நேரடியாக என்.எல்.சி. நிறுவனத்துடனும், தொழிற் சங்கங்களுடனும் உடனே பேச்சு வார்த்தை நடத்தி பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.