கிடைத்தது ஜாமீன் – இன்று வெளிவருகிறார் நிர்மலா தேவி !
பாலியல் வழக்கில் சிக்கி கடந்த ஓராண்டாக சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாலியல் தேவைகளுக்கு வழிநடத்தியட் விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் மூவருக்கும் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்ததை அடுத்து முருகனும் கருப்பசாமியும் உச்சநீதிமன்றத்தை அனுகி ஜாமீன் பெற்றனர். இதையடுத்து நிர்மலாதேவியும் உயர்நீதிமன்றத்தை அனுகி தனக்கு ஜாமீன் கொடுக்கவேண்டும் என முறையிட்டார். இதில் அவருக்கு ஜாமீன் வழங்க கடந்த வாரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரின் மூத்த அண்ணன் ரவி மற்றும் குடும்ப நண்பர் மாயாண்டி ஆகியோர் தலா ரூ.10 ஆயிரம் சொத்து மதிப்பு காட்டி ஜாமீன் பெற்றுள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பத்திரிகைகளுக்கோ தனி நபர் மூலம் ஊடகங்களுக்கோ பேட்டி அளிக்கக் கூடாது, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளோடு உதவி பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி நீதித் துறை நடுவர் மும்தாஜ் நேற்று உத்தரவிட்டார். ஜாமீன் உத்தரவு உடனடியாக மதுரை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிர்மலாதேவி இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வருகிறார்.