மோடி அருகில் தங்கள் கணவர்கள் செல்வதை பெண்கள் விரும்ப மாட்டார்கள்: மாயாவதி
பிரதமர் மோடி அருகில் தங்கள் கணவர்கள் செல்வதை பாரதிய ஜனதா கட்சியின் பெண் தலைவர்கள் கூட விரும்ப மாட்டார்கள் என்றும் ஏனெனில் மோடி போலவே தங்களுடைய கணவர்களும் தங்களை விட்டு பிரிந்து விடுவார்களோ என்ற பயம் அந்த பெண் தலைவர்களுக்கு இருக்கும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாயாவதியின் இந்த பேச்சுக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தனது டுவிட்டரில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மாயாவதி விமர்சனம் செய்திருப்பதை பார்க்கும் போது அவர் பொதுவாழ்க்கைக்கு தகுதியில்லாதவர் என்பது தெரிகிறது.
அதேபோல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து கூறியபோது, 'அரசியல் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்க்கையை மாயாவதி கடுமையாக விமர்சித்து வருகிறார் என்றும் மாயாவதியின் இந்த பேச்சு தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும், அவர் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.