வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (00:37 IST)

புதிய தேர்தல் கூட்டணி: திருவாரூரில் வைகோ இன்று அறிவிக்கிறார்

தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கான, புதிய தேர்தல் கூட்டணியை திருவாரூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று முறைப்படி அறிவிக்கிறார்.
 

 
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தை நோக்கி பயணத்தை துவங்கியுள்ளது.
 
இந்த நிலையில், மதிமுக  பொதுச் செயலாளர்  வைகோ மறு மலர்ச்சி வாகன பிரசார பயணத்தை காஞ்சிபுரம் பெரியார் தூணில் இருந்து  தொடங்கினார். இதற்கு முன்பாக, காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா  இல்லத்துக்கு சென்று அவரது  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
பின்பு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு இதே அக்டோபர் 3ஆம் தேதி, என் மீது அபாண்டமாக கொலைப் பழி சுமத்தப்பட்டு, திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.
 
அதே போன்று, திமுகவில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய போது அறிஞர் அண்ணாவை  மறக்காமல் அவரது பெயரை தனது கட்சிக்கு வைத்தார்.
 
ஆனால் இன்று திமுகவும், அதிமுகவும்  ஊழல் கட்சியாக மாறிவிட்டது. அண்ணாவையும் மறந்துவிட்டார்கள். அவரது கொள்கையையும் மறந்துவிட்டார்கள்.
 
இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு மாற்றம் வராதா என தமிழக மக்கள் ஏங்கிப்போய் உள்ளனர்.  எனவேதான், மக்களின் அந்த வாட்டத்தைப் போக்கவே, மக்கள் நல  கூட்டு இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த மக்கள்  நல இயக்கம் அரசியல் இயக்கமாக மாற்றப்படும்.
 
மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை ஆகிய 4 கட்சிகள் இணைந்து  புதிய தேர்தல் கூட்டணி அமைக்க  உள்ளோம். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அக்டோபர் 5 ஆம் தேதி அன்று திருவாரூரில்   அறிவிக்கப்படும் என்றார்.