வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 14 டிசம்பர் 2016 (13:03 IST)

சேகர் ரெட்டிக்கு அச்சகத்திலிருந்து நேரடியாக சென்ற புதிய ரூபாய் நோட்டுகள் - அதிர்ச்சி தகவல்

சென்னையை சேர்ந்த தொழிதிபர் சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனயில் இதுவரை ரூ.161 கோடி ரொக்கப்பணம் மற்றும் 179 கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.


 

 
இதில் முக்கியமாக பல கோடி ரூபாய் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு கட்டுகளாக இருந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் இந்த வழக்கு சி.பி.ஐ கைக்கு மாறியது. 
 
புதிய ரூபாய் நோட்டு கட்டுகள் எப்படி கோடிக் கணக்கில் சேகர் ரெட்டிக்கு கிடைத்தது என்ற விசாரணையில் சி.பி.ஐ அதிகாரிகள் இறங்கினர். அதில் நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகத்திலிருந்து நேரிடையாக சேகர் ரெட்டிக்கு பணம் சென்ற விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது.
 
அதாவது, வழக்கமாக புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து வங்கி கிளைகளுக்கு பணம் பிரித்து அனுப்பி வைக்கப்படும். ஆனால், புதிய ரூபாய் நோட்டுகள் அறிவிப்பின் காரணமாக, ஏராளமான வங்கிகளுக்கு உடனடியாக பணம் தேவைப்படுகிறது.
 
எனவே சில வங்கி கிளைகளுக்கு அச்சகத்திலிருந்து நேரிடையாக பணம் அனுப்பப்பட்டது. அதன்படி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஸ்டேட் வங்கி கிளை ஒன்றுக்கு அனுப்பப்பட்ட பணத்தை, வங்கி அதிகாரிகள் நேரிடையாக அப்படியே சேகர் ரெட்டிக்கு அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதில் ஸ்டேட் வங்கி கிளையின் மூத்த அதிகாரிகள் 10 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சேகர் ரெட்டிக்கு மட்டுமல்ல, பல கருப்பு பண முதலைகளுக்கு இதுபோல் பணம் சென்றதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.