1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (10:06 IST)

வாய்ப்பும், வளர்ச்சியும், முன்னேற்றமும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

வாய்ப்பும், வளர்ச்சியும், முன்னேற்றமும் அனைவருக்கும் கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
 
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் முழு, பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் எதிர்பார்ப்புப குறித்து ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
வேளாண்மை, கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி ஆகிய பல்துறை வளர்ச்சியும் ஏழை, எளியவர், நலிந்தோர், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மகளிர், முதியவர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகிய அனைத்து பிரிவினர் நலனையும் உள்ளடக்கியதாக 2015-2016-ம் ஆண்டிற்கான பட்ஜெட் அமைய வேண்டும்.
 
விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களான விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவை முழு மானியத்தில் வழங்கப்பட வேண்டும். 
 
சிறு, குறு தொழில் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, சலுகைகள் வழங்கி தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பில் கிடைக்கும் லாபத்தை அதிலேயே மறு முதலீடு செய்யும் போது முழு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
 
வேளாண் உற்பத்தி மேம்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தளவாடப் பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும். 
 
நிலக்கரியை எடுத்து செல்வதற்கும், பயணிகள் போக்குவரத்தை விரைவு படுத்துவதற்கும் கடல் வழிப்போக்குவரத்தை அறிமுகப்படுத்த வேண்டும். வாய்ப்பும், வளர்ச்சியும், முன்னேற்றமும் அனைவருக்கும் கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இதுவே இந்திய மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
நாளை (பிப்ரவரி 28) பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.