1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (00:29 IST)

நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம்: ஜெயலலிதாவின் வாக்குறுதி என்னானது? ராமதாஸ் கேள்வி

உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் அமைப்போம் என தேர்தலின் போது, ஜெயலலிதா கூறிய வாக்குறுதியை அவர் நிறைவேற்ற வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
உழவர்களின் ஒப்பற்ற தலைவராக திகழ்ந்த சி.நாராயணசாமி நாயுடுவுக்கு அவரது நினைவிடத்தில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இந்தக் கோரிக்கையை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இந்த செயல் மிகவும் வருத்தமளிக்கிறது.
 
உழவர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தரவும், அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாராயணசாமி நாயுடு அவர்கள் ஆற்றிய பணிகள் அனைவரும் அறிய வேண்டிய வரலாறு ஆகும்.
 
உழவர்களுக்காக குரல் கொடுக்க பெரிய அளவில் அமைப்புகள் இல்லாத நிலையில், தமது இளம் வயதிலேயே உழவர்களைத் திரட்டி உரிமைகளுக்காக போராட்டம் நடத்தியவர். 1970 களில் தந்தை, மனைவி ஆகியோரை அடுத்தடுத்து இழந்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் வாடிய போதும், அதை பொருட்படுத்தாமல் விவசாயத்துக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தினார்.
 
 

மின்கட்டணத்தை குறைப்பது போல குறைத்து விட்டு, மீண்டும் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசைக் கண்டித்து 1972 ஆம் ஆண்டில் அவர் தலைமையில் நடத்தப்பட்ட மாட்டுவண்டிப் போராட்டம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
 
இப்போராட்டம் குறித்து விரிவாக செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் ‘மாட்டு வண்டிகளை டாங்கிகளாக மாற்றிய விவசாயிகள்’ என்று புகழ்ந்தன. வீரம் மிக்க விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க நினைத்த திமுக அரசு 19.06.1970 அன்று 3 விவசாயிகளையும், 05.07.1971 அன்று 15 விவசாயிகளையும் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றது. அதற்குப் பிறகும் போராடிய உழவர்களின் உறுதியைக் கண்டு அஞ்சிய தமிழக அரசு அவர்களின் கோரியபடி மின்கட்டணத்தை குறைக்க ஒப்புக்கொண்டது.
 
உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் பொருட்களுக்கு அடிப்படை விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும், வேளாண்மையைத் தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நாராயணசாமி நாயுடு போராடியதன் பயனாகவே தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவின் பல மாநிலங்களில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கிடைத்தது. ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உழவர் சங்கங்கள் ஏற்படுத்தப்படுவதற்கும் நாராயணசாமி நாயுடு அவர்கள் தான் காரணமாக இருந்தார்.
 
வாழ்நாள் முழுவதையும் உழவர்களின் நலனுக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட நாராயணசாமி நாயுடு நினைவிடம் கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உள்ளது. இந்த நினைவிட வளாகத்தில் அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும், 1970-1971 போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த உழவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. நானும் பல்வேறு காலகட்டங்களில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன்.
 
2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 05.04.2011 அன்று கோவையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ‘‘அதிமுக ஆட்சிக்கு வந்தால் நாராயணசாமி நாயுடுவின் நினைவிடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும். 1970-71 போராட்டங்களில் கொல்லப்பட்ட உழவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்படும்’’ என அறிவித்தார்.
 
அப்போது, தெலுங்குதேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இடதுசாரித் தலைவர்கள் பிரகாஷ் காரத், ஏ.பி. பரதன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் முடிவடைந்து விட்ட நிலையில், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.
 
உழவர்களால் போற்றப்படும் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்கும் விஷயத்தில் தமிழக அரசு இனியும் கால தாமதம் செய்யக்கூடாது. நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கவும், 1970-71 போராட்டங்களில் கொல்லப்பட்ட உழவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கவும் தமிழக அரசு உடனே முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.