வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (11:55 IST)

தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசிய பாஜக பிரபலம்

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பரவ காரணம் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களால்தான் என்ற விமர்சனம் எழுந்து வரும் நிலையில் பாஜக பிரபலம் நாராயணன் திரிபாதி தனது டுவிட்டர் பக்கத்தில் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக டுவிட்டுக்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்த பலருக்கு தமிழகத்தில்  கொரோனா தொற்று பரவியதை அறிவோம். ஆனால், சிகிச்சைக்கு பின் அவர்கள் செய்ய முன்வந்திருக்கும் மிக பெரிய உதவியை நாம் அறிவோமா? 
 
திருப்பூரை சேர்ந்த முகமது அப்பாஸ் என்பவர், சிகிச்சைக்கு பின்னர், அம்மாவட்ட நிர்வாகத்திடம் மற்றவர்கள் யாருக்கேனும் சிகிச்சையளிக்க  தன்னுடைய  'ஊநீர்' (Plasma) தேவைப்படுமானால் தான் வழங்க தயார் என முன்வந்துள்ளார். தேனியை சேர்ந்த முகமது உஸ்மான் அலி என்பவர் என்பவர் "தான் மட்டுமல்ல தன்னுடன் பாதிக்கப்பட்ட அனைவருமே 'ஊநீர்' தானம் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
 
டில்லியில் நேற்று நடைபெற்ற ஒரு ஊநீர் சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது என்பது மகிழ்ச்சி தரும் செய்தி. பிளாஸ்மா தெரபி’அல்லது ஊநீர் சிகிச்சை என்பது என்ன? ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பாடு.
 
இதன் அடிப்படையில் கோவிட்19 நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகள் உடலில் செலுத்தப்படும்போது,அவர்கள் உடலில் உள்ள கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும். தங்களின் ஊநீரை தானம் செய்யத்தயாராயிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகளும், பாராட்டுக்களும். கொரோனா  தொற்று விவகாரத்தில்  இஸ்லாமியர்களின் மீது வெறுப்பு அள்ளி வீசப்பட்டதாகவும் அவர்கள்  மனம் புண்பட்டிருப்பதாகவும், இந்த 'ஊநீர்' தானத்தின் மூலம் அதை மாற்றியமைக்க முடியும் என தாங்கள் ம்புவதாகவும் அவர்கள் கூறியள்ளது குறிப்பிடத்தக்கது.
 
தப்லீக் ஜமாஅத் மாநாட்டினை குறித்தோ, அதற்கு  சென்றது குறித்தோ விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால், அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு  தொற்று அதிகரித்த நிலையில், அவர்களில் பலரும், அவர்களின் தொடர்புகளும் தாங்களாகவே முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவில்லை என்பதே விமர்சிக்கப்பட்டது.தப்லீக் ஜமாஅத் இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல என்றும்,ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை யாரும் குற்றம் சொல்லவில்லை என்பதையும் தான் நாம் வலியுறுத்தி கொண்டே இருந்தோம்.அவர்களின்  தாமதமான  நடவடிக்கையால் தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது, பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதை உணர வேண்டும்.இன்னும் பலர் பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளாமல் இருப்பது உண்மை கலந்த சோகம்.அவர்களின் சொந்த நலனை கருத்தில் கொண்டாவது, அவர்கள் முன்வர வேண்டியது அவசியம்
 
குணமானவர்கள்,இஸ்லாமிய மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், 'ஊநீர்' தானம் செய்ய வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை வாழ்த்த, நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நான் மதவாதியும் அல்ல போலிமதச்சார்பின்மை பேசுபவனும்  அல்ல. ஒருவரின் மதநம்பிக்கை வாழ்வை மேம்படுத்தும். அடிப்படைவாதம் வாழ்வை சீரழிக்கும். போலிமதச்சார்பின்மை ஒட்டுமொத்த சமுதாயத்தையே நாசமாக்கும். இதை அறிந்தவர்கள் அறிவாளிகள்
 
இவ்வாறு நாராயணன் திரிபாதி தெரிவித்துள்ளார்.