1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 23 மே 2014 (17:46 IST)

பாலியல் தொல்லை கொடுப்பதாக கணவர் குடும்பத்தினர் மீது பெண் புகார்

புதுவை அருகே பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
புதுவை அருகே உள்ள திருக்கனூர் திருவண்ணாமலை ரோடைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் விஜயராஜ்(24). திருக்கனூரில் நகை கடை வைத்துள்ளார். இவருக்கும், சென்னையைச் சேர்ந்த சோனா(21) என்பவருக்கும், படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து, கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருக்கும் புதுவையில் திருமணம் நடைபெற்றது. ராஜேந்திரன் குடும்பத்தினரே, லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
 
இந்த நிலையில், கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து கொடுமைபடுத்தி வருவதாக சோனா காவல் நிலையத்தில் அண்மையில் புகார் கொடுத்துள்ளார்.
 
அதில் அவர் கூறியது: பெற்றோரை பிரிந்து வந்து திருமணம் செய்துகொண்டு கணவர் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். திருமணம் ஆனதிலிருந்து, கணவர் குடும்பத்தினர் மிரட்டிகொடுமை படுத்தி வருகின்றனர்.
 
எனது கணவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார். மாமனார், மாமியார் இருவரும் வரதட்சணை கேட்டு, துன்புறுத்தி வருகின்றனர். கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.
 
இது குறித்து வில்லியனூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவல்துறையினர், கணவர் விஜயராஜ்(24), மாமனார் ராஜேந்திரன்(56), மாமியார் ரேவதி(49) ஆகியோர் மீது, பெண்ணை கொடுமைப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.