1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : செவ்வாய், 29 ஜூலை 2014 (15:43 IST)

கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கடத்தி கொலை: கைதானவர்கள் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்

சென்னையில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகள் காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
 
திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நாயுடு காலனி 3 ஆவது தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி சாருஷீலா. இவர்களது மகன் விக்கி (எ) புஷ்பராஜ் (25), காலடிப்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 28 ஆம் தேதி விக்கி திடீரென மாயமானார்.
 
புகாரின் பேரில் திருவொற்றியூர் ஆய்வாளர் பிரபு வழக்கு பதிந்து விக்கியின் செல்போன் நம்பரை வைத்து விசாரித்தபோது, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த எஸ்தர் ராணி (35) என்பவர், கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படையை ஏவி ஆந்திராவுக்கு கடத்தி சென்று விக்கியை கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக எஸ்தர் ராணியை பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் விமல், சத்தியநாராயணன், ராஜன், ரமேஷ் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் விக்கியை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புக்கொண்டனர்.

எஸ்தர் ராணி மற்றும் கொலையாளிகள் காவல்துறையில் அளித்த வாக்குமூலம்: இரண்டு ஆண்டுக்கு முன்பு சதாசிவத்தின் கம்பெனியில் விக்கி, சுஜாதா நானும் வேலை செய்தோம். அப்போது சதாசிவத்துடன் நெருங்கி பழகினேன். அதன்பிறகு வேலையை விட்டு நின்று வேறு இடத் தில் வேலைக்கு சேர்ந்தேன். இருந்தாலும் அடிக்கடி சதாசிவத்தை சந்தித்து பேசுவேன். 
 
இதற்கிடையில் சுஜாதாவுக்கும் விக்கிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது பிடிக்கததால் சதாசிவம் சுஜாதாவுடன் உல்லாசமாக இருப்பதற்கு விக்கி இடையூறாக இருக்கிறான் என என்னிடம் கூறினார். சதாசிவம் பெண்கள் விஷயத்தில் பலகீனமானவர். இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்வார். இதை காரணமாக வைத்து அவரிடம் பணம் பெற நினைத்தேன். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூலிப்படை மூலம் விக்கியை தீர்த்துக்கட்டி விடலாம். இதற்கு ரூ.7 லட்சம் செலவாகும் என ஆலோசனை கூறினேன். இதற்கு சம்மதம்  தெரிவித்து முன்பணமாக சதாசிவம் ரூ.2 லட்சம் தந்தார்.
 
பணத்தை வாங்கிக்கொண்டு எர்ணாவூரில் உள்ள மதுபான கடையில் பணியாற்றி வரும் கூலிப்படையை சேர்ந்த விமலிடம், விக்கியை தீர்த்துக்கட்டுவது குறித்து கூறினேன். இதற்கு தேவையான ஆட்களை தயார்  செய்யும்படியும் கூறிவிட்டு வந்துவிட்டேன். அதன்பிறகு கடந்த 28 ஆம் தேதி விக்கியை கொலை செய்ய முடிவு செய்தோம். அன்று காலை விக்கிக்கு போன் செய்து திருவொற்றியூர் சுங்கச்சாவடிக்கு வரச் சொன்னேன்.
 
வாடகைக்கு எடுக்கப்பட்ட காரில் விமல், சத்தியநாராயணன், ராஜன், ரமேஷ் ஆகியோருடன் அனுப்பி வைத்தேன். விக்கி கொண்டு வந்த பைக் சாலையில் நின்றால் சந்தேகம் வரும் என நினைத்து வேறொரு ஆள் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதை பார்க்கிங் செய்துவிட்டேன். காரில் வாங்கி வைத்திருந்த மதுபானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்து கொன்றுவிடும்படி கூறினேன். அதன்படியே அவர்கள் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா பகுதிக்கு வந்ததும் கை, கால்களை கட்டி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டனர். போன் மூலம் எனக்கு விவரத்தை தெரிவித்தனர். எல்லோரும் சென்றுவிடுங்கள். உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை தந்துவிடுகிறேன் என கூறினேன். 
 
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சதாசிவத்தை சந்தித்து மீதமுள்ள ரூ.5 லட்சத்தை வாங்கி அனைவரும் பங்கு பிரித்து கொண்டோம். இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
கொலை தொடர்பாக சதாசிவம், எஸ்தர் ராணி, இவரது தாய் சாந்தி, பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருந்த சுஜாதா, பாபு, கமலக்கண்ணன் ஆகிய 6 பேரை காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். ஒரு கொலை வழக்கில் தாய், அவரது மகள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பது  திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.