1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 5 நவம்பர் 2014 (18:34 IST)

கல்லூரி உதவி பேராசிரியை நிர்வாணப்படுத்தி கொடூரமாக வெட்டிக்கொலை

கோவை அருகே, வீட்டில் தாயுடன் தங்கியிருந்த கல்லுாரி உதவி பேராசிரியை, கொடூரமான முறையில், மர்ம நபர்களால்  சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டார்.
 
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மின்வாரிய அலுவலகத்தில் ஆபரேட்டராக பணியாற்றுபவர் தர்மராஜ், 50; மனைவி மாலதி, 48.  இவர்களது மூத்த மகள் ரம்யா, 24, கோவை அருகே, கிணத்துக்கடவிலுள்ள தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியையாக  பணியாற்றி வந்தார். இளைய மகள் பிரேமா, 17, பிளஸ் 1 படிக்கிறார். ரம்யாவை தவிர, மூவரும் கோத்தகிரியில் வசித்து  வருகின்றனர். ரம்யா, கல்லுாரி விடுதியிலேயே தங்கியிருந்தார். விடுமுறை நாளில் மட்டும், பெற்றோரைக் காண ஊருக்கு  வந்து செல்வது வழக்கம்.
 
கோவை மாவட்டம், காரமடை, ஆசிரியர் காலனி அருகே கணேஷ் நகரில் தர்மராஜ், புதிதாக கட்டியுள்ள வீட்டில், மாலதியின்  தாய் ரங்கம்மாள் மட்டும் வசித்து வருகிறார். விடுமுறை நாட்களில், அனைவரும் காரமடை வீட்டில் பாட்டியுடன் தங்கிச்  செல்வது வழக்கம். நேற்று மொகரம் பண்டிகைக்கு விடுமுறை என்பதால், தர்மராஜ் தனது மனைவி மாலதியை, நேற்று முன்  தினம் காரமடைக்கு அழைத்து வந்து வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். மாலதியின் தாய் ரங்கம்மாள், உறவினர் வீட்டிற்கு  சென்று விட்டார். ரம்யா இரவு 10.00 மணிக்கு காரமடை வீட்டிற்கு வந்துள்ளார். இத்தகவலை, கோத்தகிரியில் உள்ள தந்தை  மற்றும் தங்கை பிரேமாவிற்கு தெரிவித்துள்ளார்.
 
நேற்று காலை 7.00 மணிக்கு, தர்மராஜ் மகளுக்கு போன் செய்துள்ளார். போனை யாரும் எடுக்காததால், டூட்டி முடிந்து மதியம்  12.00 மணிக்கு காரமடை வீட்டிற்கு தர்மராஜ் வந்துள்ளார். லேசாக திறந்து கிடந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது,  ரத்த வெள்ளத்தில் மகள் ரம்யா, உடலில் ஆடையற்ற நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவி  மாலதி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த காரமடை காவல்துறையினர், அப்பகுதியில் விசாரணை  நடத்தினர். துப்பறியும் மோப்ப நாய், அருகே இருந்த மளிகைக் கடை வரை ஓடி அங்கு நின்றது. கோவை ரூரல் எஸ்.பி.,  சுதாகர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.
 
இதன் பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மிகவும் கூர்மையான ஆயுதத்தால், இளம்பெண்ணின் தலையில்  குத்தியுள்ளனர்; முகத்தில் வெட்டியுள்ளனர். பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான அறிகுறி இல்லை. அணிந்திருந்த தங்கச்  செயின், பீரோவில் நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் அப்படியே உள்ளன. இதனால், ஆதாய கொலைக்கான வாய்ப்பும்  இல்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாலதியிடம், விசாரணை செய்தால் நடந்த உண்மை தெரிய வரும்  என்று எஸ்.பி., சுதாகர் கூறினார்.
 
சம்பவ இடத்தை, டி.ஐ.ஜி., ஆயுஷ்மணிஸ் திவாரி ஆய்வு செய்தார். வழக்கு பதிவு செய்த காரமடை காவல்துறையினர்,  கொலையாளிகளை பிடிக்க நான்கு தனிப்படை அமைத்துள்ளனர். இக்கொலை சம்பவம், காரமடையில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.