1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anadhakumar
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (17:43 IST)

காய்கறிகளை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள்

கரூரில் முன்னறிவிப்பின்றி தரைக்கடை வியாபாரிகளின் பொருட்கள் மற்றும் காய்கறிகளை அள்ளிச் சென்ற நகராட்சி அதிகாரிகள்.


 


கரூரை அடுத்த வெங்கமேட்டில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாலையின் இரு புறங்களிலும் நாள்தோறும் தரைக்கடைகள் அமைத்து காய்கறிகளை வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.

அவர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி அவர்கள் அனைவரையும், கொங்கு நகர் பிரதான சாலையில் தரைக்கடைகளை வைத்துக் கொள்ள நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியதை அடுத்து அவர்கள் அங்கு சென்று தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அங்கு வந்த நகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இங்கு தரைக்கடைகளை போடக் கூடாது எனக் கூறி தராசு மற்றும் காய்கறிகளை அள்ளிச் சென்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கரூர் மாவட்ட தரக்கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அந்த பகுதியில் உள்ள தரைக்கடை வியாபாரிகளை திரட்டி கரூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.

பிறகு நகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவர்த்தையில் மீண்டும் கடைகள் அமைத்திட ஒப்புக்கொண்டார். இதில் சிஐடியூ சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.முருகேசன், தரக்கடை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.தண்டபாணி, விதொச மாவட்ட பொறுப்பு செயலாளர் இரா.முத்துசெல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.