வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2017 (10:33 IST)

பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு ஓபிஎஸுக்கு தான் உள்ளது: அதிமுக எம்.பி. மைத்ரேயன் அதிரடி!

பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு ஓபிஎஸுக்கு தான் உள்ளது: அதிமுக எம்.பி. மைத்ரேயன் அதிரடி!

ஆளும் அதிமுகவுக்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாறியுள்ளதை அடுத்து தமிழகத்தில் நிலையான ஆட்சி தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பெரும்பான்மையான எம்எல்ஏக்களின் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு தான் உள்ளது என கூறியுள்ளார்.


 
 
முதல்வராக இருந்த என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என சசிகலா தரப்பு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தார் ஓபிஎஸ். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த ஓபிஎஸ் பொங்கி எழுந்துவிட்டார்.
 
இந்நிலையில் சசிகலா முதல்வராக முடியுமா, எம்எல்ஏக்களின் ஆதரவு அவருக்கு கிடைக்குமா என பல்வேறு கேள்விகள் நிலவி வருகிறது. இதனையடுத்து நேற்று நள்ளிரவு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் ஒரே குடும்பமாக தங்கள் பக்கம் இருப்பதாக கூறினார்.
 
ஆனால் ஓபிஎஸ் பக்கம் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் நேற்று முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவருக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது, ஜெயலலிதா ஏற்கனவே பன்னீர்செல்வத்தை இருமுறை முதல்வராக நியமித்துள்ளார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் பன்னீர்செல்வம் மட்டும்தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்குதான் அனைவரும் ஆதரவு அளிப்பார்கள்.
 
அதிமுகவில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வத்திற்குதான் ஆதரவு அளிக்கிறார்கள் என மைத்ரேயன் கூறினார். இந்நிலையில் சசிகலா முதல்வராக பதவியேற்க போதுமான பெரும்பான்மை எண்ணிக்கையிலான எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.