’மோடி ஏன் ஜெயலலிதாவை பார்க்க வரவில்லை?’: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் திருநாவுக்கரசர்


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 24 அக்டோபர் 2016 (18:17 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏன் பிரதமர் மோடி சந்திக்க வரவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
 
 
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்தி சந்திக்க வந்திருந்தார். திருநாவுக்கரசர், அப்போது பிரதமர் மோடி ஏன் ஜெயலலிதாவை பார்க்க வரவில்லை என கேள்வி எழுப்பி இருந்தார். 
 
திருநாவுக்கரசரின் கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்து இருந்தார். அவர், தேவையற்ற விமர்சனங்களில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் இதே பிரச்சனையை திருநாவுக்கரசர் கையில் எடுத்துள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ”கடந்த காலங்களில் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் இதே அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலம் குன்றியிருந்த நிலையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நேரில் வந்து நலம் விசாரித்தார்.
 
அதேபோல, இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா கார் விபத்தில் காயமடைந்து சென்னை தேவகி மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது ராஜீவ்காந்தி அவர்கள் நேரில் வருகை புரிந்து நலம் விசாரித்தார். 
 
இந்த அடிப்படையில் இன்றைய பிரதமராக இருக்கிற நரேந்திர மோடி அவர்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவை நலம் விசாரித்து தமிழக பாஜகவினர் கூடுதல் அரசியல் நன்மை தேடலாமே? ஏன் செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :