1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (17:12 IST)

வறேன்னு சொன்னீங்க! வரவேயில்லையே? – ஜி.கே.வாசனை டெல்லிக்கு அழைத்த மோடி

உச்சி மாநாட்டிற்காக சென்னை வந்த பிரதமர் மோடி ஜி.கே.வாசனை டெல்லிக்கு அழைத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன அதிபரை சந்திப்பதற்காக சென்னை வந்த பிரதமரை அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர். அப்போது ஜி.கே.வாசனை சந்தித்த பிரதமர் “கடந்த முறை வீட்டிற்கு வருவதாக சொல்லியிருந்தீர்கள். ஆனால் வரவில்லையே? இந்த முறை கட்டாயம் வரவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ஜி.கே.வாசன் ”கோவையில் பாராளுமன்ற பிரச்சாரத்தின்போது என்னுடன் அன்பாக பேசியவர், கண்டிப்பாக வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் சில காரணங்களால் என்னால் போக முடியவில்லை.

இவ்வளவு நாள் கழித்தும் அதை மறக்காமல் ஏன் வரவில்லை என்று கேட்டது மிகச்சிறந்த பண்பு. இந்த முறை கண்டிப்பாக சென்று அவரை சந்திப்பேன். சிலர் அவர் பேசும் விஷயங்களை திரித்து பேசுகிறார்கள். அவர் ஒரு கூட்டணி கட்சியினர் என்ற முறையிலேயே மிகவும் சகஜமாக பேசினார்” என தெரிவித்துள்ளார்.

எனினும் ஜி.கே.வாசனுக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருப்பது கூட்டணிகளுக்கு உள்ளேயும், மற்ற கட்சிகளிலும் சிறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.