வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:05 IST)

நடமாடும் அம்மா உணவகங்கள் அமைக்கவேண்டும் – அரசியல் தலைவர் கோரிக்கை!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனவும் நடமாடும் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இப்போது அதிகமாக உள்ளது. இப்போது வரை 621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்னும் 7 நாட்களில் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் அதை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதையொட்டு அமமுக தலைவர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’அடுத்த இரண்டு வாரங்கள் இன்னும் சவால் நிறைந்ததாக இருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். மக்களை முழுமையாக காப்பாற்ற, தேவைப்பட்டால் ஏப்ரல் 14க்குப் பிறகு மேலும் ஓரிரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம். அப்படி அமல்படுத்துவதற்கு முன்பு கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையிலும், மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளைச் சரியான திட்டமிடுதலோடு செய்வதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

சிகிச்சையில் உடல்நலம் தேறி வந்தவர்கள் திடீரென உயிரிழந்திருப்பது சரியான நேரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தையே உணர்த்துகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ள தினகரன், “வீடு, வீடாக சென்று கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டுவிட்டு கையெழுத்து வாங்குவதற்குப் பதிலாக, கொரோனா பாதிப்பை அரை மணிநேரத்தில் கண்டறியும் உபகரணம் வந்த பிறகு இந்த ஆய்வினை மேற்கொண்டால் சந்தேகப்படுபவரை அதே இடத்தில் சோதிக்க முடியும்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு போதுமான கவச உடைகளும், பாதுகாப்பு உபகரணங்களும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்கு இணையாக ஊரடங்கினால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

0 நாட்களைக் கடப்பதற்குள்ளாகவே அவர்கள் படாதபாடுபட்டு வருகிறார்கள். அரசு அறிவித்த ரூ.1,000 உதவித்தொகை இன்னும் முழுமையாக சென்றடையாத நிலையில், ஊரடங்கை நீட்டிக்கும்போது குறைந்தபட்சம் அவர்களுக்கு உணவு கிடைப்பதற்கான ஏற்பாட்டினைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நடமாடும் அம்மா உணவகங்களைச் செயல்படுத்துவது மக்களுக்குப் பேருதவியாக இருக்கும்.’ எனக் கூறியுள்ளார்.