வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (20:53 IST)

மனிதநேய மக்கள் கட்சியின் பெயரில் பொதுக்குழு தஞ்சையில் நடைபெறுவது சட்டவிரோதமானது : எம்.எச்.ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அதில் “மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் தலைமையில் சென்னை 600045 மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள டிஜிபி திருமண மண்டபத்தில் கடந்த அக்டோபர் 6ம் தேதி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, அ. அஸ்லம் பாஷா உள்ளிட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் இந்தப் பொதுக் குழுவில் பங்குகொண்டார்கள்.
 
இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் தற்போதுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கலைக்கப்பட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தேர்தலில் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தலைவராகவும், ப. அப்துல் சமது பொதுச் செயலாளராகவும், ஒ.யூ. ரஹ்மதுல்லாஹ் மீண்டும் பொருளாளராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
 
எனது தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சிக்கு போட்டியாக பொதுக்குழு என்ற பெயரில் அக்டோபர் 11 அன்று தஞ்சாவூரில் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது சட்டவிரோதமானதாகும். அத்தகைய கூட்டத்தில் பங்குகொள்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும் என்ற எச்சரிக்கிறோம். மேலும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைமையின் அனுமதியில்லாமல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.