1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 14 ஜூன் 2018 (09:56 IST)

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : அதிமுக திட்டம் என்ன?

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாவதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
பெரிதும் எதிர்பர்க்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்று மதியம் 1 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக, டிடிவி தினகரன் அணி தரப்பினர் இந்த தீர்ப்பை எதிர்பார்த்து ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். ஆனால், இந்த தீர்ப்பை அதிமுக தரப்பு சற்று பதட்டத்துடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில்,  அதிமுகவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பாக இது கருதப்படுகிறது.
 
தீர்ப்பு எப்படி வெளியானலும் அதிமுகவிற்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. தகுதி நீக்கம் செல்லும் எனக்கூறிவிட்டால், அந்த 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் அதிமுகவிற்கு எதிராகவே வாக்களிப்பார்கள். அந்த தொகுதிகளில் தினகரன் அணி வேட்பாளரோ அல்லது திமுக வேட்பாளரோ, யார் வெற்றி பெற்றாலும் அதிமுகவிற்கு ஆட்சியை பறிகொடுக்கும் நிலை ஏற்படும்.
 
ஒருவேளை தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வெளியானால், தினகரனுடன் சேர்ந்து தனி அணியாக சட்டசபையில் எடப்பாடி அரசுக்கு எதிராக அவர்கள் செயல்படுவார்கள். மேலும், திமுகவுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்கவும் அவர்கள் முயற்சி செய்வார்கள். அதற்கான முயற்சியை திமுக தரப்பு நிச்சயம் எடுக்கும் எனத் தெரிகிறது. 
ஆனாலும், இது இரண்டும் இல்லாமல், இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட மறு அமர்வுக்கு செல்லும். அந்த தீர்ப்பு வரும் வரை இதே ஆட்சி தொடரும். தற்போதுவரை இந்த நம்பிக்கையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இருக்கிறது.
 
ஒருபக்கம், 18 எம்.எல்.ஏக்களில் சிலரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் எடப்பாடி தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பில் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் அடங்கியிருப்பதால் அதிமுக தரப்பில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
 
அதோடு, எந்த தீர்ப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும் என ஏற்கனவே ஆளுநருடன் மத்திய அரசு ஆலோசனை செய்துள்ளது. எப்படி பார்த்தாலும், அதிமுகவிற்கு சாதகமாகவே தீர்ப்பு அமையும். இந்த ஆட்சி தொடரும் என அதிமுக ஆதரவாளர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.