1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (17:39 IST)

யாருக்கு முதுகெலும்பு இல்லை?- திமுகவுக்கு ஜெயக்குமார் பதிலடி

காஷ்மீர் பிரச்சினையில் அதிமுக மத்திய அரசுக்கு ஆதரவு அளித்ததை முதுகெலும்பில்லாத்தனம் என டி ஆர் பாலு பேசியதால் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், திமுகவுக்கும் சண்டை வலுத்துள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையிலும், இன்று மக்களவையிலும் நிறைவேற்றப்படுகிறது. இந்த மசோதாவுக்கு அதிமுக இரு அவைகளிலும் தங்கள் ஒப்புதலை வழங்கியுள்ளன. திமுக எம்.பிக்கள் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து அவையில் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு “அதிமுக முதுகெலும்பில்லாமல் இந்த மசோதாவை ஆதரித்திருக்கிறார்கள். நாங்கள் முகுகெலும்பு இருப்பதால் எதிர்க்கிறோம்” என்று பேசியுள்ளார். திமுகவினர் எப்போது அதிமுகவை விமர்சித்தாலும் உடனே கோபமாக வந்து ஆஜராக கூடியவர் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.

இதுகுறித்து தனது கண்டனங்களை தெரிவித்த ஜெயக்குமார் “கட்சத்தீவு விவகாரத்தில் முதுகெலும்பில்லாமல் அதை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தவர்கள் திமுகவினர். முதுகெலும்பில்லாதவர்கள் எங்களை முதுகெலும்பு அற்றவர்கள் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

மனித உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு இந்தியாவுக்கு காஷ்மீரும் முக்கியம். இதை அன்றே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசியிருக்கிறார்” என கூறியுள்ளார். யாருக்கு முதுகெலும்பு இல்லை என்று நடந்த இந்த சண்டை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.