வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 16 அக்டோபர் 2014 (11:48 IST)

தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடக்கிறது: மு.க.ஸ்டாலின் தாக்கு!

தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியைத் தாக்கி மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
கடலூர் மாவட்ட திமுக பொதுகுழு உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ''கடந்த 27 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சிகரமான மாற்றமாக அமைந்திருக்கிறது. இந்த மாற்றம் நிகழ்ந்தபோது, நாங்கள் பொறுமை காத்தோம். ஏனெனில் இந்த தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
நீதிக்கு தலைவணங்க வேண்டும் என்று ஏற்கனவே எங்களுக்கு திமுக தலைவர் கட்டளை இட்டிருந்தார். அதனால் நாங்கள் பொறுமை காத்தோம். ஆனால், சில பத்திரிகைகள் கருணாநிதி அமைதியாக இருக்கிறார் என்று எழுதியது.
 
சட்டமன்ற செயலாளரின் பணி என்ன தெரியுமா? ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவி போய்விட்டால், அந்த தொகுதி காலியாக இருக்கிறது என்று அறிவிக்க வேண்டும். ஆனால், கடந்த 27 ஆம் தேதி முதல் தற்போது வரை ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருக்கிறது என்பதை அவர் அறிவிக்கவில்லை.
 
தீர்ப்பு வந்ததற்கு மறுநாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக தேர்வு செய்கிறார்கள். அதற்கு அடுத்தநாள் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. ஆனால், இன்னும் ஓ.பன்னீர்செல்வம் அறையில் நிதி அமைச்சர் என்ற பெயர்ப்பலகை தான் இருக்கிறது. அதை கழற்ற வேண்டிய பொறுப்பு சட்டமன்ற செயலாளருக்கு உள்ளது. ஆனால், அதை அவர் செய்யவில்லை.
 
நேற்று முன்தினம் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் என்று அறிவித்திருக்கிறார். அப்போது, ஒரு செய்தியாளர் ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக சட்டமன்ற செயலாளரிடம் இருந்து உங்களுக்கு கடிதம் வந்ததா? என்று கேட்டதற்கு, அவர் இன்னும் தகவல் வரவில்லை என்று சொல்கிறார்.
 
தமிழகத்தில் ஒரு பொம்மை ஆட்சி நடக்கிறது. பொம்மை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் கலைஞர் தலைமையில் ஆட்சி அமையும் என்று சபதம் ஏற்போம்" என்றார்.