திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (08:34 IST)

ஒரே நாளில் 25 லட்சம் தடுப்பூசி; தமிழகம் சாதனை – மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றது. இரவு 7 மணி வரை அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டதுடன், தடுப்பூசி செலுத்த ஆதார் அவசியமில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தடுப்பூசி முகாம் நிறைவடைந்த நிலையில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “கொரோனாவை தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இன்று 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை!” என்று தெரிவித்துள்ளார்.