Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

துணை வேந்தர்களா? இல்லை அரசியல்வாதிகளா?; டிஸ்மிஸ் செய்யுங்கள் - ஸ்டாலின் கொந்தளிப்பு


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 23 டிசம்பர் 2016 (12:53 IST)
சசிகலா நடராஜன் அதிமுக கட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று துணை வேந்தர்கள் கூறியிருப்பது, அவர்கள் அரசியல்வாதிகளாகி விட்டதை அப்பட்டமாக காட்டுகிறது என்று திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

அஇஅதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வமான நாளேடான ’டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிக்கையில் 10 பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணைவேந்தர்களும், அண்ணா பல்கலைகழகத்தின் பதிவாளரும் சசிகலாவை சந்தித்த செய்தி வெளியிடப்பட்டது.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும், அரசியல் விமர்சகர்களும் சசிகலாவைச் சந்தித்தது குறித்து சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ”பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக் கழக துணைவேந்தர்கள் போயஸ் தோட்டம் சென்று அரசு பொறுப்பில் இல்லாத திருமதி சசிகலா அவர்களை சந்தித்துள்ளது அந்தப் பதவிக்குரிய கண்ணியத்தையும் மாண்பையும் கெடுத்து விட்டது.

அதுவும் திருமதி சசிகலா நடராஜன் அதிமுக கட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று இவர்கள் கூறியிருப்பது துணை வேந்தர்கள் அரசியல்வாதிகளாகி விட்டதை அப்பட்டமாக காட்டுகிறது.

எனவே மாண்புமிக்க துணை வேந்தர் பொறுப்பை அரசியலாக்கும் நோக்கோடு செயல்பட்ட துணை வேந்தர்களை உரிய பணியாளர் சட்டங்களின்படி பதவி நீக்கம் செய்து, நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் பயிலும் ‘உயர்கல்வியின் தரத்தை’ பாதுகாக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :